நெல்லை முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி கொலை வழக்கு : குற்றவாளிகளை நெருங்கிவிட்டதாக போலீஸ் தகவல்

நெல்லை முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி கொலை வழக்கில் தி.மு.க. பிரமுகரின் மகன் உட்பட 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நெல்லை முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி கொலை வழக்கு : குற்றவாளிகளை நெருங்கிவிட்டதாக போலீஸ் தகவல்
x
நெல்லை ரெட்டியார்பட்டியில் உள்ள வீட்டில் வசித்து வந்த தி.மு.க. முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி, அவரின் கணவர், பணிப்பெண் என 3 பேர் கடந்த 23ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டனர். 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. சொத்துக்காக கொலை நடத்திருக்கலாம் என்ற கோணத்தில் உமாமகேஸ்வரியின் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். வடமாநில கொள்ளையர்கள் ஆதாயக்கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டது. துப்புதுலங்காததால் போலீசார் திணறிவந்தனர்.  

அடுத்த கட்டமாக, தி.மு.க. மாநில ஆதிதிராவிடர் நல குழு உறுப்பினரான மதுரையை சேர்ந்த சீனியம்மாளிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். காழ்ப்புணர்ச்சியால் கொலை வழக்கில் தன்னை சிக்கவைக்க முயற்சி நடப்பதாக சீனியம்மாள் குற்றம்சாட்டியிருந்தார். 

இந்நிலையில், உமாமகேஸ்வரி கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, சீனியம்மாளின்  மகன் கார்த்திகேயனை ஞாயிற்றுக்கிழமை மாலை பிடித்த தனிப்படை போலீசார், அவரை பாளையங்கோட்டை ஆயுதபடை மைதானத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மேலும் இரண்டு பேரை பிடித்த போலீசார் அவர்களிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  சீனியம்மாளின்  மகன் கார்த்திகேயனுடைய  காரை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தலில் சீட் வாங்கி தருவதாக சீனியம்மாளிடம் உமாமகேஸ்வரி பணம் பெற்று மோசடி செய்ததாக கூறப்படுகிறது. அந்த விவகாரத்தில்  கொலை நடத்திருக்குமோ என்ற கோணத்தில் மூன்று பேரிடமும் விசாரணை தொடர்கிறது. 

Next Story

மேலும் செய்திகள்