ஆடி கிருத்திகையை முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு பழனி முருகன் கோவில் அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டது.
x
பழனி : 

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு பழனி முருகன் கோவில் அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டது. அதிகாலையில் விஸ்வரூப தரிசனம் அளித்த முருகப்பெருமான், விளாபூஜையில் சந்நியாசி அலங்காரத்துடனும், காலசந்தி பூஜையில் வேடர் அலங்காரத்துடனும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள்  கலந்து கொண்டனர்.

திருத்தணி :

ஆடி கிருத்திகையை முன்னிட்டு, திருத்தணி சுப்ரமணிய சுவாமி  கோயிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. உற்சவர் சண்முகநாதர் புஷ்பம் மற்றும் தங்க ஆபரண அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் உடலில் அலகு குத்தியும், காவடி எடுத்தும் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பழமுதிர் சோலை :

முருகப்பெருமானின் ஆறாவது படைவீடான பழமுதிர் சோலையில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு, அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

மருதமலை :

கோவை மாவட்டம் மருதமலை முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா சிறப்பாக நடைபெற்றது. மேளதாளம் முழங்க காவடி எடுத்தும், அலகு குத்தியும், வந்த பக்தர்கள், அரோகரா கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

சுவாமிமலை : 

முருகனின் நான்காம் படை வீடான சுவாமிமலை கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. முருகனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து முருகனை தரிசனம் செய்து வருகின்றனர். வடக்கு பிரகாரத்தில் உள்ள மயில் வாகன அலங்காரத்தில் உள்ள முருகனுக்கும் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 

Next Story

மேலும் செய்திகள்