பெண்ணை அடைய துடித்த தொழிலதிபர் - கொன்று கடலில் வீசிய 'குடுமி பிரகாஷ்'...

சென்னை அடையாறில் வீட்டு வேலை செய்த பெண்ணை அடைய நினைத்த தொழிலதிபரிடம், 65 லட்சம் ரூபாய் வரை பணம் சுருட்டிய பெண் வழக்கறிஞர், அவரை கொன்று கடலில் வீசியுள்ளார்.
x
சென்னை அடையாறு இந்திரா நகரை சேர்ந்த தொழிலதிபர் சுரேஷ் பரத்வாஜ் கடந்த மாதம் 21 ஆம் தேதி திடீரென மாயமாகியுள்ளார். இதுகுறித்து அவரது உறவினர்கள் அடையாறு காவல்நிலையத்தில் புகார் அளிக்கவே, போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர். சுரேஷ் பரத்வாஜின் கார் ஓட்டுநரிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில், அவர் காணாமல் போன அன்று பெண் வழக்கறிஞரான பிரீத்தி என்பவரது வீட்டிற்கு சென்றது தெரிய வந்த‌த‌து. சுரேஷ் பரத்வாஜ் தன்னை சந்தித்து விட்டு உடனடியாக ஆட்டோவில் சென்றுவிட்டதாக வழக்கறிஞர் பிரீத்தி கூறிய நிலையில், சம்பவத்தன்று அவர் வீட்டு கண்காணிப்பு கேமராக்கள் அனைத்து வைக்கப்பட்டிருந்த‌து போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, பெண் வழக்கறிஞர் செல்போன் எண்ணை ஆய்வு செய்த போலீசார், சுரேஷ் பரத்வாஜ் சென்ற அதே பாதையில் சென்ற காசிமேட்டை சேர்ந்த குடுமி பிரகாஷ் என்பவரிடம் அடிக்கடி பேசியது தெரிய வந்த‌து. 

இதனால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்த நிலையில், சுதாரித்து கொண்ட வழக்கறிஞர் பிரீத்தி தலைமறைவானார். இதையடுத்து காசிமேட்டில் சுற்றித்திரிந்த குடுமி பிரகாஷை பிடித்த போலீசார், கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அவர் அளித்த வாக்குமூலத்தின் படி, திருமணமாகாத சுரேஷ் பரத்வாஜ், தன் வீட்டில் வேலை செய்து வந்த சித்ரா என்ற பெண் மீது ஆசை கொண்டுள்ளார். இதற்காக அவருக்கு அவ்வப்போது பண உதவி செய்து வந்துள்ளார்.  ஒருநாள் பரத்வாஜ், சித்ரா மீது அத்துமீற முயன்றநிலையில், சித்ரா வேலைக்கு செல்வதை தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பரத்வாஜ், தன்னிடம் வாங்கிய 4 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பி தருமாறு சித்ராவை நிர்பந்தித்துள்ளார். பணம் இல்லாமல் தவித்த சித்ரா, வழக்கறிஞர் பிரீத்தியிடம் நடந்த‌தை கூறி உதவி கேட்டுள்ளார். பரத்வாஜிடம் பணம் அதிகமாக உள்ளதை அறிந்து கொண்ட பிரீத்தி, சித்ராவை வைத்து, அவரிடம் பணத்தை கறக்க முடிவெடுத்தார். அதன்படி, சித்ராவை ஆசைக்கு இணங்க வைப்பதாக கூறி, பரத்வாஜிடம் சித்ரா 65 லட்சம் ரூபாய் வரை பணம் பறித்த‌தாக கூறப்படுகிறது. 

ஆனால் அதன் பிறகு பிரீத்தியிடம் இருந்து எந்த பதிலும் வராத‌தால் ஆத்திரமடைந்த பரத்வாஜ், பணத்தை திருப்பி தரும்படி நச்சரித்துள்ளார். இதனால் அவரை தீர்த்து கட்ட திட்டம் தீட்டிய வழக்கறிஞர் பிரீத்தி, சித்ராவை காசிமேட்டில் படகில் வைத்திருப்பதாக கூறி பரத்வாஜை அனுப்பியுள்ளார். அங்கு ஏற்கனவே திட்டமிட்டபடி, ரவுடி குடுமி பிரகாஷ் பரத்வாஜை  படகில் அழைத்துகொண்டு கடலுக்குள் சென்றுள்ளார். பின்னர் சினிமா பாணியில்,  திடீரென துடுப்பால் தலையின் பின்புறம் பலமாக அடித்து குடுமி பிரகாஷ், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து உடலை கடலில் வீசி விட்டு திரும்பி வந்துள்ளார். இந்த திடுக்கிடும் வாக்குமூலத்தை பதிவு செய்துகொண்ட போலீசார், குடுமி பிரகாஷ் அவனது கூட்டாளிகள் சுரேஷ், மனோகர் உள்பட 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். முக்கிய குற்றவாளியான வழக்கறிஞர் பிரீத்தி உள்பட மேலும் 4 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். இதையடுத்து காணாமல் போனதாக பதியப்பட்ட வழக்கை கொலை வழக்காக மாற்றி அடையாறு போலீசார் பிரகாஷ் அளித்த தகவலின் பேரில் பிரகாஷ் மற்றும் அவனது  கூட்டாளிகள்  சுரேஷ், மனோகர் , சந்துரு, ராஜா, சதீஷ்குமார் ஆகிய  6 பேரையும் கைது செய்தனர். 6 பேரையும்  கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான பிரீத்தி உள்பட 4 நான்கு பேரை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்