சினிமாவை மிஞ்சும் வகையில் நாடகம் - காதலனுடன் சேர்ந்து குழந்தையை கடத்திய இளம் பெண்...

காதலனுடன் சேர்ந்து குழந்தையை கடத்தி விட்டு சினிமாவை மிஞ்சும் வகையில் நாடகமாடிய இளம்பெண்ணை சென்னை போலீசார் 10 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு கைது செய்துள்ளனர்.
x
சென்னை ஷெனாய் நகரை சேர்ந்த தம்பதி அருள்ராஜ், ந‌ந்தினி. மருத்துவர்களான  இவர்களின் 3 வயது குழந்தை அன்விகாவை கவனித்து கொள்வதற்காக இணையதளம் மூலமாக பணிப்பெண்ணை தேடியுள்ளனர். இதன் மூலம், சென்னை பாடிகுப்பத்தை சேர்ந்த அம்பிகா என்ற பெண் அறிமுகம் ஆகிறார். ஒருமாதம் வேலை செய்து வந்த  அம்பிகா, மற்றும் 3 வயது குழந்தை அன்விகா திடீரென மர்ம நபர் ஒருவரால் கடத்தப்படுகின்றனர். கடத்திய மர்ம நபர் அருள்ராஜ்  - ந‌ந்தினி தம்பதியிடம் 60 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அதிர்ச்சியடைந்த மருத்துவ தம்பதி அமைந்தகரை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அமைந்தகரை காவல்நிலையத்தில் இருந்தபடியே பணிகளை தீவிரப்படுத்தினார். இதனால் விசாரணை சூடுபிடித்த‌து. மீண்டும்  4 மணிக்கு அருள்ராஜ் -  ந‌ந்தினி தம்பதிக்கு  போன் செய்த அந்த மர்ம நபர் பணத்தை தரவில்லை என்றால், குழந்தையையும் பணிப்பெண் அம்பிகாவையும் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார். இந்த அழைப்பு வந்த செல்போனின் சிக்னல் ரெட்ஹில்ஸ் அருகே பதிவானது... இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார், தப்பி ஓட முயன்ற மர்ம நபரை விரட்டி பிடித்தனர். இதையடுத்து, நீலாங்கரையில் இருந்த அம்பிகாவும், மருத்துவ தம்பதியின் 3 வயது குழந்தையும் மீட்கப்பட்டனர். கடத்தல்நபரை கைது செய்து குழந்தையை மீட்ட பிறகே மாநகர காவல் ஆணையர் ஏகே விஸ்வநாதன் அமைந்தகரை காவல்நிலையத்தில் இருந்து கிளம்பி சென்றார். போலீசாரிடம் சிக்கிய மர்ம நபரிடம் விசாரித்த‌தில், அம்பிகாவும் இந்த கடத்தலுக்கு உடந்தை, கடத்தியவர் அம்பிகாவின் காதலன் என திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அம்பிகா கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு முகப்பேரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்துவந்துள்ளார். அப்போது, அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்தவர் தான் இந்த கடத்தலை அரங்கேற்றிய கலிமுல்லா. இருவரும் காதலித்து வந்த நிலையில்,  சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இந்த கடத்தல் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். குழந்தையை வீட்டிற்குள் கொண்டு செல்வது போல பாசாங்கு செய்த அம்பிகா, கலிமுல்லாவுடன் சேர்ந்து குழந்தையை கடத்திவிட்டு, தானும் கடத்தப்பட்டது போல, சினிமா பாணியில் நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். சென்னை போலீசாரின் துரித நடவடிக்கையால் இவர்களின் பலே நாடகம் முறியடிக்கப்பட்டு குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்