நீட் மசோதா விவகாரம் குறித்து கேள்வி எழுப்பிய ஸ்டாலின்...

நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்ற வேண்டும் என திமுக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் வலியுறுத்தியுள்ளார்.
நீட் மசோதா விவகாரம் குறித்து கேள்வி எழுப்பிய ஸ்டாலின்...
x
சட்டப்பேரவையில் திமுக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், நீட் தேர்வு மசோதா திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம் குறித்து  இன்று கேள்வி எழுப்பினார். அப்போது நிராகரிக்கப்பட்ட 2 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பீர்களா? என கேட்டார். 


இதற்கு பதிலளித்த சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், மத்திய அரசால் கடந்த 22.9.2017ஆம் தேதி திருப்பி அனுப்பப்பட்ட மசோதா குறித்து தமிழக அரசு கடிதம் எழுதியும் இதுவரை பதில் கடிதம் கிடைக்கப்பெறவில்லை என்றார். மசோதாவில் என்ன குறை இருக்கிறது என தெரிந்தால் தான் அடுத்த கட்ட முடிவை எடுக்க முடியும் என கூறிய அமைச்சர், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், ரிஜக்ட் என்ற வார்த்தை குறிப்பிடப்படவில்லை என்றும் அதற்கு பதிலாக வித் ஹெல்டு அண்ட் ரிட்டர்ன் என்ற வார்த்தையே இடம்பெற்றிருப்பதாக கூறினார். மசோதாக்களில் உள்ள  குறைகளை சுட்டிக்காட்டினால், அதை சரிசெய்து மீண்டும் குடியரசு தலைவருக்கு அனுப்பலாம் என்றும் கூறிய அமைச்சர், மத்திய அரசின் கடிதத்தை, அவையில் படித்துக்காட்டினார். இதுதொடர்பாக முதல்வர் மற்றும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து, உரிய முடிவை எடுப்போம் இல்லாவிட்டால் சட்ட ரீதியாக வழக்கு தொடர்வோம் எனவும் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார். 2 ஆண்டுகளாக ஏன் அழுத்தம் தரவில்லை என கேள்வி எழுப்பிய ஸ்டாலின், சட்டப்பேரவையில் மீண்டும் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தினார். 

உள்ளாட்சி தேர்தல் எப்போது? - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதில்

உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு தயாராக இருப்பதாக சட்டப்பேரவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். சட்டப்பேரவையில் உள்ளாட்சி தேர்தல் குறித்து திமுக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்பதால் இனியாவது தேர்தல் நடத்தப்படுமா? என கேள்வி எழுப்பினார். அதேபோல் உடனடியாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் ராமசாமியும் பேரவையில் வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, 21 ஆண்டுகளுக்கு பிறகு வார்டு வரையறைகள் மேற்கொள்ளப்பட்டு அது தற்போது முடிக்கப்பட்டுள்ளதாக கூறினார். உள்ளாட்சித் தேர்தலை நடத்த அரசு தயாராக உள்ளது என்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். 



Next Story

மேலும் செய்திகள்