சாந்தகுமார் கொலை வழக்கு: ராஜகோபாலின் மனுவை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

சாந்தகுமார் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக அவகாசம் கோரி ராஜகோபால் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், அவரை உடனடியாக சரணடையவும் உத்தரவிட்டுள்ளது.
x
ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமார் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ராஜகோபாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டு இருந்தது. இதை எதிர்த்து ராஜகோபால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த மனுவை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் ராஜகோபால் உள்ளிட்ட  6 பேருக்கு ஆயுள் தண்டனையும் 3 பேருக்கு 3 ஆண்டுகளும், 2 பேருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து உத்தரவிட்டது. மேலும் இவர்கள் அனைவரும் ஜூலை 7ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சரணடைந்து சிறைக்கு செல்லவும் உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் சென்னை 4வது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் 9 பேரும் சரணடைந்தனர். அவர்களின் விபரங்களை சரிபார்த்த நீதிமன்றம் அவர்களை சிறையில் அடைத்தது. ஆனால் தன் உடல்நிலை மோசமாக இருப்பதால் மருத்துவமனையில் இருந்த படி தண்டனையை அனுபவிக்க உத்தரவிட வேண்டும் என ராஜகோபால் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று என்.வி.ரமணா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜகோபாலின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், அவரை உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜராக சரணடைய வேண்டும் என தெரிவித்தனர். மேலும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற ஜனார்த்தனனும் உடனடியாக சரணடைய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

நீதிமன்ற உத்தரவின்படி ராஜகோபால், ஜனார்த்தனன் சரணடைய வேண்டும் - ஜீவஜோதி

நீதிமன்ற உத்தரவின்படி ராஜகோபால், ஜனார்த்தனன் என 2 பேரும் சரணடைய வேண்டும் என உயிரிழந்த சாந்தகுமாரின் மனைவி ஜீவஜோதி தெரிவித்துள்ளார். நமது தந்தி டிவிக்கு தொலைபேசி வாயிலாக பேட்டியளித்த அவர், இவ்வாறு கூறினார். 



Next Story

மேலும் செய்திகள்