காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் : ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை நியமிக்க நடவடிக்கை
தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களில், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் ஆயிரம் பேரை, 15 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழகத்தில் 12 ஆயிரத்து 616 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடங்கள் உள்ளன. இதில், 2 ஆயிரத்து 896 இடங்கள் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களில் தகுதியும், அனுபவமும் வாய்ந்த ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை நியமிக்க தமிழக அரசு முடிவெடுத்தது. இதையடுத்து, தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி இதற்கான அரசாணை வெளியிட்டது.
இந்நிலையில் முதல் கட்டமாக, மாநிலம் முழுவதும் ஆயிரம் பேரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டங்கள் தோறும் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை, மாதம் 15 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதிய அடிப்படையில் தேவைக்கேற்ப நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நியமனம் ஓராண்டு அல்லது தேவையான காலம் வரை தொடரலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தற்போது அந்தந்த மாவட்டங்களில், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை பணியமர்த்தும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் ஆணையரும், கூடுதல் தலைமை செயலாளருமான சத்யகோபால், இது தொடர்பாக ஆட்சியர்களுக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
Next Story

