தூய்மை இந்தியா விருதுகளை குவிக்கும் திருச்சி மாநகராட்சி : அடிப்படை வசதிகள் இல்லை என குற்றச்சாட்டு

திருச்சி மாநகராட்சி 25-ம் ஆண்டு வெள்ளி விழாவை கொண்டாடி வரும் நிலையில், அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
x
மலைக்கோட்டை மாநகரம் என அழைக்கப்படும் திருச்சி, 1994-ம் ஆண்டில்,  ஸ்ரீரங்கம், பொன்மலை நகராட்சிகள், கோ. அபிஷேகபுரம், அரியமங்கலம் பேரூராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக உருவெடுத்தது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், உலகில் வேகமாக வளரக்கூடிய நகரங்களில், 8 - வது இடத்தை திருச்சி மாநகரம் பெற்றுள்ளது. கடந்த, 2016-ம் ஆண்டு முதல் தூய்மை இந்தியா திட்டத்தில், தொடர்ந்து விருதுகளை குவித்து வருகிறது  திருச்சி மாநகராட்சி.   2018ம் ஆண்டு, தேசிய அளவில், 4,023 நகரங்களில், 13-வது இடம் பெற்று திருச்சி மாநகராட்சி சாதனை படைத்தது.

தற்போது  25-ம் ஆண்டு  விழாவை கொண்டாடி வரும், திருச்சி மாநகராட்சியில், மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதியை கொண்டு, ஏராளமான பூங்காக்கள், நடைபாதைகள், உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஒருபுறம், விருதுகள், வளர்ச்சித் திட்டங்கள் என்றிருந்தாலும், அரியமங்கலம் குப்பைக் கிடங்கை அகற்ற வழி தெரியாமல், மாநகராட்சி நிர்வாகம் விழி பிதுங்கி நிற்பதாகவும், பெரும்பாலான இடங்களில், சாக்கடைகள் வழிந்து ஓடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பெரும்பாலான இடங்களில் அடிப்படை வசதிகள் சரிவர இல்லை எனவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்தென் மாவட்டங்களின் நுழைவு வாயிலான திருச்சி மாநகரில் , ஒருங்கிணைந்த பேருந்து நிலையமோ, உலகப் பிரசித்திப் பெற்ற ஸ்ரீரங்கத்தில் பேருந்து நிலையமோ இதுவரை அமைக்கப்படாதது ஏன் என்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

மாநகராட்சியை அழகுப்படுத்த மெனக்கெடும் அதிகாரிகள், மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மலைக்கோட்டை மாநகர் மக்களின் கோரிக்கையாக உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்