புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீர‌ர்கள் - தலா ரூ.14 லட்சம் நிதி உதவி - முதலமைச்சர் வழங்கினார்

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்களின் குடும்பத்தினருக்கு, சென்னை மாநகர காவல்துறை சார்பாக, தலா 14 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
x
தூத்துக்குடி மாவட்டம், சவலப்பேரி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் அரியலூர் மாவட்டம், கார்குடியைச் சேர்ந்த  சிவசந்திரன் ஆகிய இரண்டு வீரர்கள் கடந்த பிப்ரவரி மாதம், காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தனர். உயிரிழந்த வீர‌ர்களின் குடும்பத்தினருக்கு,  தமிழக அரசு 20 லட்சம் ரூபாய் நிதி உதவி அறிவித்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் வழங்கியுள்ளது. இதை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும், பிரபலங்களும், நிதி உதவி வழங்கி வந்தனர்.  அந்த வகையில், சென்னை மாநகர காவல்துறை சார்பில், சுப்பிரமணியன் மற்றும் சிவசந்திரன் குடும்பத்தினருக்கு, தலா 14 லட்சம் ரூபாய் நிதி உதவியை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார். இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த உயிரிழந்த வீர‌ர்களின் உறவினர்கள், இறந்த இரண்டு வீரர்களின் சிலையை அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்