எட்டு வழி சாலை திட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு

8 வழிச்சாலை திட்டத்திற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
x
சென்னை - சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை திட்டம் 10  ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டன. இதற்காக  சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் சுமார் ஆயிரத்து 900 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
 
விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும், இந்தத் திட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்திலும் விவசாயிகள் வழக்கு தொடர்ந்தனர். இதேபோல், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜன் உள்பட பலரும் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்,. சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அமர்வு, நிலம் கையகப்படுத்த தடை விதித்து கடந்த ஏப்ரல் 8ம் தேதி உத்தரவிட்டது. இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு  வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்