நனவாகுமா கோதாவரி- காவிரி இணைப்பு திட்டம்?

தமிழகத்தில் தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்பு திட்டம் தொடங்கப்பட்டு பாதி பணிகள் நிறைவுற்ற நிலையில் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நனவாகுமா கோதாவரி- காவிரி இணைப்பு திட்டம்?
x
இந்தியாவில் ஓடும் நதிகளில் நீர்வளம் உள்ளவற்றில் இருந்து வற்றிய பகுதிகளுக்கு தண்ணீரை கொண்டு செல்லும் நோக்கில், 1982ம் ஆண்டில் அமைக்கப்பட்டது தேசிய நீர் வளர்ச்சி நிறுவனம். அதில், இந்தியாவில் ஓடும் 137 நதிகள் மற்றும்  துணைநதிகள், அவை திசைமாறும் இடங்கள் சேர்க்கப்பட்டன. இவற்றில் தேசிய நீர்வளர்ச்சி  நிறுவனம் சார்பில் 74 நீர்த்தேக்கங்கள் மற்றும் 37 நதி இணைப்புகளில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. இந்த ஆய்வு பணிகளுக்கு பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில்,  2006-ஆம் ஆண்டு முதல், மாநில அரசுகள் அளித்த நதிகள் இணைப்பு திட்டங்களும் அதில் சேர்க்கப்பட்டது. இதுவரை தமிழகம் உட்பட 9 மாநிலங்கள் சார்பில் 47 நதிகள் இணைப்பு திட்டங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், தேசிய நீர் வளர்ச்சி நிறுவனம் சார்பில், இதுவரை தீபகற்ப நதிகளின் இணைப்புக்காக 16 திட்டங்களையும் இமயமலை நிதிகள் வகைக்காக 14 ஆய்வு திட்டங்களையும்  மேற்கொள்ள மத்திய அரசு முடித்துள்ளது.

இவற்றில் குறிப்பிட்டுள்ள தகவல்களின்படி தமிழகம் சம்பந்தப்பட்ட நான்கு நதிகள் இணைப்பு திட்டம் அதில் இடம்பெற்றுள்ளன. அதில், தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மற்றும் புதுவை மாநிலங்களில் பாயும் பென்னாறு, காவிரி, வைகை, குண்டாறு, ஹேமாவதி, நேத்ராவதி, பம்பா, வைப்பாறு ஆகிய நதிகளை இணைக்கும் திட்டமும்,  கிருஷ்ணா-கோதாவரி நிதி நீர் இணைப்பு திட்டமும் கவனம் பெரும் திட்டங்களாக உள்ளது. கிருஷ்ணா-கோதாவரி நிதிகள் மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரா, ஒடிசா மற்றும் சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில் ஓடுகின்றன. நதிகள் இணைப்பு திட்டத்துக்கு மத்திய அரசு முன்னுரிமை கொடுத்துவந்த போதிலும் சந்திரபாபு நாயுடு தனது ஆட்சி காலத்திலேயே கோதாவரி - கிருஷ்ணா இணைப்பு திட்டத்தை தொடங்கிவிட்டார். கோதாவரி தண்ணீரை 24 ராட்சத பம்புகள் மூலம் கிருஷ்ணா ஆற்றில் கலப்பதே அந்த திட்டத்தின் நோக்கமாகும் . முதற்கட்டமாக கோதாவரி - கிருஷ்ணா இணைக்கப்படும் பட்சத்தில் பென்னாறு அந்த திட்டத்தில் இணைக்கப்படும், அதன் பின்னர் அத்திட்டத்தின் நீட்சியாக காவிரிக்கு கோதாவரி தண்ணீர் கொண்டுவரப்படும். கிருஷ்ணா-கோதாவரி திட்டத்தால் ஆந்திரா அதிக பலனை அடைவதுடன் தமிழகத்திற்கு அதிக தண்ணீரை அனுப்பி வைக்க முடியும்  என்ற கருத்து நிலவுகிறது. இது ஒருபுறம் இருக்க தமிழகத்தில் தாமிரபரணி, கருமேனியாறு,  நம்பியாறு இணைப்பு திட்டம் தொடங்கப்பட்டு பாதி பணிகள் நிறைவுற்ற நிலையில் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்