குழந்தை திருமணத்தை தடுத்தி நிறுத்தியதாக ஆட்டோ ஓட்டுநர் வெட்டி கொலை

சென்னை அயனாவரத்தில் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தியதாக ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், மகளின் திருமண வரவேற்பு அன்று வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
x
சென்னை அயனாவரம் திக்காகுளத்தை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர்  ஜெபசீலன். இவரின் மகள் சீபாராணிக்கு கடந்த 10 ஆம் தேதி திருப்பதியில் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் , திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக கிளம்பிகொண்டிருந்த ஜெபசீலனை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டி கொன்றுவிட்டு தப்பிச்சென்றுள்ளது. ஆட்டோ ஓட்டுநர்  ஜெபசீலன் படுகொலை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை அயனாவரம் பகுதியில் கடந்த மாதம் 17 ஆம் தேதி, 17 வயது சிறுமி ஒருவருக்கு திருமணம் நடைபெறுவதாக இருந்தது. அதை அறிந்ததும், சென்ற போலீசார், சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர். திருமணம் பற்றிய தகவலை போலீசாருக்கு யார் கொடுத்திருப்பார்கள் என்ற தகவல்களை திரட்டும் வெறித்தன வேலையில் சிறுமியின் குடும்பத்தினர் இறங்கியதாக கூறப்படுகிறது. அந்த பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சங்க தலைவர் ஜெபசீலன், சிறுமி திருமணம் பற்றிய தகவலை போலீசாரிடம் கூறியிருக்கலாம் என கருதி வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதுவே கொலைக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. நேற்று மாலை மீஞ்சூரில் தனது மகளின் திருமண வரவேற்பு நிகழ்வுக்காக ஜெபசீலனும் அவரின் மனைவியும் புறப்பட்டுக்கொண்டிருந்தனர். உறவினர்களை முன்பே மீஞ்சூருக்கு அனுப்பிய ஜெயசீலன் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது வழிமறித்த கும்பல் ஒன்று, ஜெபசீலனை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளது. இதை தடுக்க முயன்ற ஜெபசீலன் மனைவிக்கும் அரிவாள்வெட்டு விழுந்து பலத்த காயம் ஏற்பட்டது. கொலையாளிகளின் குறியில் தப்ப இயலாத நிலையில், ஜெபசீலன் கொல்லப்பட்டார். இந்த படுகொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அயனாவரம் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை நிறுத்தினார் என்ற சந்தேகத்தில் ஆட்டோ ஓட்டுநர் அவர் மகளின் திருமண வரவேற்பு தினத்தன்றே கொல்லப்பட்டது அயனாவரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்