பண்ருட்டியில் களைகட்டியது தித்திக்கும் பலாப்பழம் சீசன்...

மற்ற ஊர்களைவிட, தனிச்சுவையும், நாசிகளை துளைக்கும் மனமும் கொண்டு, நாவில் உமிழ் நீர் சுரக்க வரவேற்பது பண்ருட்டி பலாப்பழம்.
x
கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டியின் பெயரைச் சொன்னவுடன் அனைவருக்கும் நினைவில் வருவது பலாப்பழம் மட்டுமே. அந்த அளவுக்கு விளைச்சல் அதிகம். ஏப்ரல் தொடங்கி ஜூன் வரை களைகட்டும் பலாப்பழம், தற்போது மனம் வீசத் தொடங்கியுள்ளது. தானே புயல் சேதத்துக்கு பிறகு, அந்தப் பகுதியில் உள்ள 150க்கும் மேற்பட்ட கிராமங்களில் மீண்டும் மெல்ல புத்துயிர் பெற்றுள்ளது பலா உற்பத்தி. மரமே தெரியாத அளவுக்கு காய்த்து குலுங்கும் பலாப்பழத்தின் பருமன், தற்போது சுருங்கி விட்டதால், இழப்பே என்கின்றனர் விவசாயிகள். மலைபோல் குவியும் பழங்கள், ஆந்திரா, கர்நாடகா, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு டன் கணக்கில் ஏற்றுமதியாகின்றன. தலா 200 டன் அளவில் சென்னைக்கும் மும்பைக்கும் ஏற்றுமதியாகி, அந்த மக்களை மனமும், சுவையுமாக பண்ருட்டி பலா கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. ஆனால், வியாபாரிகள் வரத்தும் குறைவு. வந்தாலும் கொள்முதல் செய்யும் விலை மிகவும் குறைவு என்று கூறும் விவசாயிகள், கடின உழைப்பால் உற்பத்தி செய்யப்படும் பழங்களுக்கு, உரிய விலை கிடைப்பதில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர்.

ஜி.எஸ்.டி.யின் பாதிப்பு ஒருபக்கம் விற்பனையை குறைக்க, மழையின்றி போனதால், பலா  விளைச்சல் குறைந்தது மற்றொரு சோகம். பலாப்பழங்களை நீண்ட நாள் வைத்து விற்பனை செய்ய ஏதுவாக குளிரூட்டு நிலையம் அமைக்கவும், அரசு மானியம் வழங்கவும் கோரிக்கை வலுத்துள்ளது. பலா சார்ந்த தொழிற்சாலை அமைத்தல், விற்பனை கூடம் அமைத்தல்,அரசே கொள்முதல் செய்தல், நலிவடையும் போது மானியம் வழங்குதல் என உதவிகள் பலவற்றை கோருகின்றனர் விவசாயிகள். சங்க இலக்கியத்தில் நெடுநல்வாடையாக பாடல்பெற்ற இந்த சுவை மிகுந்த பலா, உற்பத்தியாளர்களின் வாழ்விலும் சுவை கூட்ட வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை...

Next Story

மேலும் செய்திகள்