படுக்கை நோயாளிகளுக்கான 'டாய்லெட் பெட்'...

படுக்கையில் முடங்கிய நோயாளிகளுக்கு உதவும் வகையில் டாய்லெட் பெட் என்ற படுக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை வடிவமைத்தவர் மூன்றாம் வகுப்பு மட்டுமே படித்தவர்.
x
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த தளவாய்புரத்தை சேர்ந்தவர் சரவணமுத்து. மனைவி கிருஷ்ணம்மா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். நாகர்கோவில் செட்டிகுளத்தில் சிறிய தொழிற்கூடத்தை அமைத்து அங்கு தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் தனது மனைவி கருப்பை அறுவை சிகிச்சை முடிந்து படுக்கையில் இருந்த காலக்கட்டத்தில், சரவணமுத்து தான் அவரை முழுமையாக கவனித்துள்ளார். அந்த தருணத்தில் தான் காலமெல்லாம் படுக்கையிலேயே கிடந்து தவிக்கும் மனிதர்களின்  சிரமத்தை எண்ணி வருந்தியுள்ளார். இதற்கொரு தீர்வைக் கண்டுபிடிக்க முயன்றபோது, அவர் மனதில் உதயமானது டாய்லெட் பெட். தனது சிறிய தொழிற்கூடத்தில் டாய்லெட் பெட்டுக்கான செயல்வடிவத்தை தீட்டியுள்ளார். அதன்படி படுக்கையின் பட்டனை அழுத்தியதும் நடுப்பகுதியில் டாய்லெட் கோப்பை வந்துவிடுகிறது. மீண்டுமொரு முறை பட்டனை அழுத்தினால் சுத்தம் செய்ய தண்ணீர் வருகிறது. அதனையடுத்து டாய்லெட் கோப்பை நகர்ந்து, பெட் சாதாரண படுக்கையாக மாறிவிடுகிறது. 

ஒரு டாய்லெட் பெட் தயாரிக்க அறுபத்து ஓராயிரம் ரூபாய் செலவாகியுள்ளது. அந்தத் தயாரிப்பை அகமதாபாத்தில் உள்ள இந்திய ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பியுள்ளார். இந்த கண்டுபிடிப்பிற்காக கடந்த மார்ச் மாதம் குடியரசு தலைவர்  கையால் தேசிய விருதும் பெற்றிருக்கிறார் சரவணமுத்து. சரவணமுத்து, டாய்லெட் பெட் கண்டுபிடிப்பாளர் மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் இந்த கண்டுபிடிப்பை சமூக வலைதளத்தில் பார்த்து, இதுவரை 675 பேர் தொடர்புக்கொண்டு டாய்லெட் பெட்டுக்காக ஆர்டர் கொடுத்துள்ளார்களாம். இதற்காகப் பெரிய நிறுவனத்துடன் இணைந்து செயல்படவும் முடிவு செய்திருப்பதாகவும், இதற்கு போதிய நிதி இல்லாததால்  வறுமையில் வாடும் தனக்கு  தமிழக அரசு உதவி செய்தால், படுக்கையில் வாழ்க்கையைக் கடத்தும் பலரது வாழ்க்கையில் பேருதவியாக இருக்கும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் சரவணமுத்து.

Next Story

மேலும் செய்திகள்