செல்போன் கடை மேலாளர் கடத்தல் : மடக்கிய போலீஸ் - கடத்தல் கும்பலுக்கு ஐ.பி.எல். சூதாட்டத்தில் தொடர்பா?

சென்னையில் செல்போன் கடை மேலாளரை கடத்தி 5 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
x
சென்னையில் செல்போன் கடை மேலாளரை கடத்தி 5 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக புகார் அளித்த இரண்டு மணிநேரத்துக்குள் கடத்தல் கும்பலை போலீசார் மடக்கி பிடித்துள்ளனர். 

சென்னை கீழ்பாக்கம் ஆர்ம்ஸ் சாலையில் உள்ள மொபைல் ஃபேக்டரி என்னும் செல்போன் விற்பனை கடையை, குணால் என்பவர் நடத்தி வருகிறார். இவரது கடையில், மேலாளராக பணியாற்றி வருபவர், ராகுல் சந்த். டீ கடை அருகே நண்பர் திலீப்புடன் ராகுல் சந்த் நின்று கொண்டிருந்தபோது, மர்ம நபர் ஒருவர் அவரை வலுக்கட்டயமாக இழுத்து சென்று ஆட்டோவில் கடத்தி சென்றுள்ளார்.

சற்றுநேரத்தில் தனது செல்போனில் இருந்து கடை ஊழியரை தொடர்பு கொண்ட ராகுல் சந்த், மர்ம நபர்கள் தன்னை கடத்தியுள்ளதாகவும், தன்னை விடுவிக்க 5 லட்ச ரூபாய் கேட்பதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பாக ராகுல் சந்தின் சகோதரர் கீழ்ப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் ராகுல் சந்தின் செல்போன் இருப்பிடம் குறித்த விவரத்தையும், அவரது கடை ஊழியர் ஒருவர் போலீசாரிடம் அளித்துள்ளார்.  

இந்த தகவலின் அடிப்படையில், மெரினா கடற்கரை பகுதியில் கீழ்ப்பாக்கம் போலீசார் சந்தேகத்துக்குரிய ஆட்டோவை தேடி வந்தனர். ஆனால் திடீரென செல்போன் சிக்னல் நின்றதால் தேடும் பணியில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் மீண்டும் அண்ணா சாலை, பெரியார் சிலை அருகே கடத்தல்காரர்கள் இருப்பது செல்போன் சிக்னல் மூலம் தெரியவந்துள்ளது.  

இதனால் அந்த பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஆட்டோ ஒன்று வந்துள்ளது. அதனை போலீசார் நிறுத்த முயன்ற போது ஆட்டோ நிற்காமல் சென்றுள்ளது. போலீசாரின் எச்சரிக்கையை மீறி ஆட்டோ சென்றதால் ஜீப்பை மோதி ஆட்டோவை போலீசார் நிறுத்தியுள்ளனர். ஆட்டோவிலிருந்து தப்பியோட முயன்ற கடத்தல்காரர்கள் 5 பேரை கீழ்ப்பாக்கம் உதவி ஆணையர் ஜெகதீஸ்வரன் உள்ளிட்ட போலீசார் மடக்கிபிடித்தனர். 

தலைமறைவாக உள்ள சட்ட கல்லூரி மாணவரான விமல் என்பரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த கும்பல் மீது ஏழுகிணறு, யானைகவுனி உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த கும்பல் ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபடும் கும்பல் எனவும் அதற்காகவே இந்த கடத்தல் நடைபெற்று இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்