ஆர்.டி.இ., சட்டத்தை அமல்படுத்த மறுக்கும் சி.பி.எஸ்.இ பள்ளிகள்...

ஆர்.டி.இ., எனப்படும் இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் 8 ம் வகுப்பு வரை 25 சதவீதம் ஒதுக்கீடு செய்ய சிபிஎஸ்இ பள்ளிகள் மறுத்து வருகின்றன.
x
மத்திய அரசு, கடந்த 2009 ம் ஆண்டு, ஆர்.டி.இ., எனப்படும் இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தை கொண்டு வந்தது. தமிழகத்தில், இச்சட்டம் 2010ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின்படி, சிறுபான்மை அல்லாத அனைத்து தனியார் பள்ளிகளும், ஆரம்ப நிலை வகுப்பில், அதாவது எல்.கே.ஜி., அல்லது முதல் வகுப்பில் உள்ள மொத்த இடங்களில், 25 சதவீத இடங்களை, ஏழை, எளிய மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்த சட்டத்தின் கீழ் சேரும் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை, மத்திய, மாநில அரசுகள் வழங்குகின்றன. அதன்படி 8 ஆம் வகுப்பு வரை, இலவசமாக மாணவர்கள் படிக்க முடியும். மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இதனை நடைமுறைப்படுத்தி வரும் நிலையில் தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள் மட்டும் இந்த சட்டத்தை அமல்படுத்த தொடர்ந்து முரண்டு பிடித்து வருகின்றன. ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ள  தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில், 10,000 த்திற்கும் அதிகமான இடங்கள், ஆர்.டி.இ., சட்டத்தின் கீழ் நிரப்ப முடியும் என்ற போதிலும், சட்டத்தை அமல்படுத்த இந்த பள்ளிகள் மறுத்து வருகின்றன. எனவே இந்த பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள் மத்தியில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மாநில அளவில், ஆர்.டி.இ., சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரியாக உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன், ஏப்ரல் 22 ம் தேதி முதல், மே 18 ம் தேதி வரை ஆன்லைன் வழியாக  விண்ணப்பிக்கலாம் எனவும், இதற்காக சிறுபான்மை அல்லாத அனைத்து பள்ளிகளும், ஆர்.டி.இ., சட்டத்தின் கீழ் உள்ள இடங்களை பகிரங்கமாக அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். ஆனாலும், சிபிஎஸ்இ பள்ளிகள் குறித்து, சுற்றறிக்கையில் நேரடியாக எந்த கருத்தையும் வெளியிடாதது, பெற்றோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மாணவர், பெற்றோர் நலச் சங்கத்தின் தலைவர் அருமைநாதனும் கோரிக்கை விடுத்துள்ளார். ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் சிபிஎஸ்இ பள்ளிகள், ஏழை, எளிய குழந்தைகளுக்கு உடனடியாக 25 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் கல்வியாளர்கள், பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்