என்று தணியும் சென்னை தாகம் ? மாற்று ஏற்பாடுகள் என்ன ?

கோடைக் காலத்துக்கு முன்பே சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த நிலையை சமாளிக்க மாநகராட்சி தயாராக இருக்கிறதா?
x
சென்னையில் கோடைக் காலம் இப்போதே தொடங்கிவிட்டது என்பதற்கு ஏற்ப பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  வரும் நாட்களின் நிலைமை கொடூரமாக இருக்கும் என்கின்றனர் சூழலை கவனித்து வருபவர்கள்.

சென்னையின் குடிநீர் விநியோகம் வாரம் ஒருமுறை என குறைக்கப்பட்டுள்ள நிலையில், நிலத்தடி நீர் நிலைமையோ கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத வகையில் மோசமாகக் குறைந்துள்ளதாகக் குறிப்பிடுகின்றன ஆய்வுகள்.

2016 - ஆம் ஆண்டு பெய்த மழை அளவைவிட 2018 - ஆம் ஆண்டு மழை அதிகம் என்று  மண்டல வானிலை மையம் கூறுகிறது.  2016- ல் 324.6 மில்லி மீட்டர் மழை பெய்தது என்றால், 2018 ல் 390.3 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. ஆனாலும் தண்ணீர் தட்டுப்பாடு உருவாகியுள்ளது.

சென்னை மக்களின் ஒரு நாள் குடிநீர் தேவை அதிகபட்சமாக 120 கோடி லிட்டராகவும்,  குறைந்த பட்சம் 83 கோடி லிட்டராகவும் உள்ளது. இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் சென்னை நகர குடிதண்ணீர் விநியோகம் 65 கோடி லிட்டராக குறைக்கப்பட்டது. இதை 45 கோடி லிட்டராக குறைக்கவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.  இப்படி குறைத்தால் நாள் ஒன்றுக்கு 60 லிட்டர் தண்ணீர்தான் ஒரு குடும்பத்துக்கு கிடைக்கும்.

இந்த நீர் தேவைகள் 50 சதவீதம் ஏரிகள், நீர் தேக்கங்கள்,25 சதவீதம் கடல்நீர் சுத்திகரிப்பு, 25 சதவீதம் நிலத்தடி நீரை சார்ந்து உள்ளன. குறிப்பாக நெம்மேலி, மீஞ்சூர் கடல் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 10 கோடி லிட்டர் வரை பூர்த்தி செய்கின்றன. வீராணம் ஏரியில் இருந்து 18 கோடி  லிட்டர், திருவள்ளூர், காஞ்சிபுரம் விவசாயக் கிணறுகள், மெட்ரோ கட்டுப்பாட்டு கிணறுகளில் இருந்து 6 கோடி லிட்டர், சிக்கராயபுரம் உள்ளிட்ட குவாரிகளில் இருந்து 3 கோடி லிட்டர், செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் ஏரிகள், மற்றும் கிருஷ்ணா நீர் போன்றவையும் நீர் தேவைகளை பூர்த்தி செய்கின்றன. இது தவிர கழிவு நீர் சுத்திகரிப்பு மையங்களில் இருந்து 1 கோடி லிட்டர் நீர் மறு சுழற்சி நீர் விநியோகம் செய்யப்படுகின்றன.

சிக்கராயபுரம் குவாரிகளில் தேங்கியுள்ள நீர் குழாய்கள் மூலம் செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து விநியோகத்துக்கு வருகிறது. ஆனால் இவை எல்லாம் கோடைக்காலத்தை சமாளிக்கும் ஏற்பாடுகள் மட்டுமே என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வழக்கத்தை விட மழை அதிகமாக பெய்தாலும், அதை சேகரிக்கும் வசதிகள் குறைந்தது, அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீர் உறிஞ்சுவது, மழை நீர் சேகரிப்பில் காட்டும் அலட்சியம், நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு எல்லாம் சேர்ந்து மிகப் பெரிய அபாயத்தை உருவாக்கியுள்ளன. என்று தணியுமோ சென்னையின் இந்த தாகம்? 


Next Story

மேலும் செய்திகள்