முத்ரா திட்டம் யாருக்கு பயன்..? - பிரமாண்ட கருத்துக் கணிப்பு
முத்ரா கடன் திட்டத்தின் செயலாக்கம் குறித்த பிரமாண்ட கருத்துக் கணிப்பை நடத்தியது தந்தி குழுமம்.
முத்ரா திட்டம் மூலம் தமிழகத்தில் 2 கோடியே 16 லட்சம் பேர் பயனடைந்துள்ள நிலையில், இந்த திட்டம் கந்து வட்டி கொடுமைகளுக்கு மாற்றாக உள்ளதென 70 புள்ளி 8 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தை பிரதமர் மோடி 2015 ஏப்ரல் 8ஆம் தேதி தொடங்கி வைத்தார். 10 லட்சம் ரூபாய்க்கு குறைவாக கடன் தேவைப்படும் நிறுவனங்களுக்கு இத்திட்டத்தின்மூலம் கடன் வழங்கப்படுகிறது.
முத்ரா திட்டம் குறுந்தொழில் முனைவோர் தங்களின் தொழிலை மேம்படுத்தவும், விரிவுபடுத்திக் கொள்ளவும் 3 வகைகளில் கடன்களை வழங்குகிறது. அதன்படி, சிசு திட்டம் மூலமாக 50 ஆயிரம் ரூபாய் வரையும், கிஷோர் திட்டம் மூலம் 5 லட்சம் ரூபாய் வரையும், தருண் திட்டத்தின் மூலம் 10 லட்சம் ரூபாய் வரையும் கடன் பெறலாம்.
அனைத்து வகையான உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் செய்வோர் இத்திட்டத்தின்கீழ் பயன் பெறலாம். கடன் பெற 18 வயது பூர்த்தி யானவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் எந்த வங்கியிலும் வாராக் கடன் தொகையை வைத்திருக்கக்கூடாது. வாங்கும் கடனை 5 ஆண்டுகள் வரை திருப்பி செலுத்தலாம். வங்கிகளுக்கு தகுந்தவாறு கடனுக்கான வட்டி வீதம் மாறுபடுகிறது.
இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் மட்டும் 2 கோடியே 16 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். தமிழகத்தில்2015-16 ஆம் ஆண்டில் 47 லட்சத்து 81 ஆயிரத்து 567 பேரும், 2015-16 ஆம் ஆண்டில் 53 லட்சத்து 9 ஆயிரத்து 857 பேரும் முத்ரா திட்டம் மூலம் பயனடைந்துள்ளனர்.
அதேபோல் 2017-18ம் ஆண்டில் 58 லட்சத்து 60 ஆயிரத்து 165 பேருக்கும், 2018-19ம் ஆண்டில் 57 லட்சத்து 34 ஆயிரத்து 180 பேருக்கும் முத்ரா திட்டம் மூலம் கடன் வழங்கப்பட்டுள்ளது. முத்ரா திட்டம் தொடர்பாக தமிழகம் முழுவதும் தந்தி டி.வி. தினத்தந்தி நாளிதழ், மாலைமலர், மற்றும் dt next இணைந்து சிறு மற்றும் குறுந்தொழில்புரிவோர்களிடம் பிரமாண்ட கருத்துக் கணிப்பை நடத்தியது.
முத்ரா கடன் பெறும் வழிமுறைகள் எளிமையாக உள்ளதா என்ற கேள்விக்கு 78 புள்ளி 5 சதவீதம் பேர் ஆம் என்றும் 21 புள்ளி 5 சதவீதம் பேர் இல்லை எனவும் பதில் அளித்துள்ளனர். கந்துவட்டி போன்ற கொடுமைகளுக்கு முத்ரா மாற்றாக இருக்கிறதா என்ற கேள்விக்கு, 70 புள்ளி 8 சதவீதம் பேர் ஆம் எனவும், 17 புள்ளி 2 சதவீதம் பேர் இல்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். அதேபோல் 12 சதவீதம் பேர் ஓரளவு என்று கூறியுள்ளனர்.
எத்தனை பேருக்கு புதிதாக வேலை கொடுத்தீர்கள் என்ற கேள்விக்கு, 2 புள்ளி 5 சதவீதம் பேர், 10 பேருக்கும் மேல் எனவும், 5 முதல் 10 பேருக்கு என 7 புள்ளி 7 சதவீதம் பேரும் பதில் அளித்துள்ளனர். அதேபோல் யாருக்கும் புதிதாக வேலை கொடுக்க வில்லை என்று 41 புள்ளி 7 சதவீதம் பேரும், ஒன்று முதல் 5 பேருக்கு புதிதாக வேலை வழங்கியதாக 48 புள்ளி 1 சதவீதம் பேரும், தெரிவித்துள்ளனர்.
நீங்கள் தொடங்கிய தொழில் தற்போது வரை வெற்றிகரமாக தொடர்கிறதா என்ற கேள்விக்கு ஆம் என்று 90 புள்ளி 1 சதவீதம் பேரும், இல்லை என்று 9 புள்ளி 9 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். முத்ரா திட்டம் மூலம் கிடைத்த கடன் தொகையை எந்த வகையில் பயன்படுத்தினீர்கள் என்று புதிதாக தொழில் தொடங்குவதற்காக என்று 39 புள்ளி 3 சதவீதம் பேரும், இருக்கும் தொழிலை விரிவுபடுத்த என்று 60 புள்ளி 7 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
Next Story