சிலிண்டர் திருட சென்ற நபரை வீட்டின் உள்ளே வைத்து பூட்டிய துணிச்சல் சிறுமி

சென்னையில், சிலிண்டர் திருட சென்ற மர்ம நபரை வீட்டின் உள்ளே வைத்து பூட்டி போலீசில் பிடித்து கொடுத்த சிறுமிக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.
x
சென்னை எம்ஜிஆர் நகர் எஸ் எம் கார்டன் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது வீட்டுக்கு டிவி ரிப்பேர் செய்ய வந்ததாக கூறி மர்ம நபர் ஒருவர் சென்றுள்ளார். அப்போது வீட்டில் விஜயகுமாரின் 11 வயது மகள் பிரியா மட்டுமே இருந்துள்ளார். டிவி ரிப்பேர் செய்வது போல் பாவ்லா காட்டிய  அந்த நபர், திடீரென சமையலறைக்குள் சென்று கேஸ் சிலிண்டரை எடுத்துக் கொண்டு வெளியே செல்ல முயன்றுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுமி, அவரை தடுத்துள்ளார். ஆனால் அந்த நபர் சிறுமியை கீழே தள்ளி விட்டு தப்பிக்க முயன்றுள்ளார். ஆனால் சுதாரித்த பிரியா, அந்த நபரை கீழே தள்ளி உடனடியாக வெளியே ஓடிச் சென்று வீட்டின் கதவை வெளிப்பக்கமாக பூட்டியுள்ளார். 

இதைத்தொடர்ந்து சிறுமி கூக்குரல் எழுப்பவே அக்கம்பக்கத்தினர் எம்ஜிஆர் நகர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். முத்து, சிறுமி பிரியாவின் தாயார் இதனையடுத்து அங்கு சென்ற போலீசார், அந்த நபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த நபர் புதுச்சேரியை சேர்ந்த அசோக்குமார் என்பதும், 6 மாதங்களாக வளசரவாக்கம், விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக சிலிண்டர்கள் திருடி கடைகளில் 1500 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை குறைந்த விலைக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. 

வீட்டை காலி செய்து குடும்பத்துடன் வேறு ஊருக்கு செல்வதாகவும் அதனால் சிலிண்டரை விற்பதாகவும் கூறி கடைக்காரர்களை நம்ப வைத்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் சிலிண்டர் திருடும் போது தலையில் ஹெல்மெட் அணிந்து வீட்டுக்குள் நுழைவதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அசோக்குமாரை கைது செய்த போலீசார், அவனிடம் இருந்து 17 சிலிண்டர்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். சிலிண்டர் திருடன் அசோக்குமாரை தைரியமாக கீழே தள்ளி விட்டு,  அவனை வீட்டினுள் வைத்து பூட்டிய சிறுமி பிரியாவுக்கு பாராட்டுக்கள் குவிகின்றன. 

Next Story

மேலும் செய்திகள்