13 வயதில் ரவுடி - 120 வழக்குகள் : மனைவி, பிள்ளைகளுக்காக திருந்தி வாழ ஆசைப்படும் குற்றவாளி

13 வயதில் ரவுடியாக மாறி 120 வழக்குகளுக்கும் மேல் உள்ள அருப்பு நவாஸ் என்ற குற்றவாளி, தன் குடும்பத்திற்காக திருந்தி வாழ உள்ளதாக மனு அளித்துள்ளார்.
x
சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் சையது சர்ப்பிராஸ் நவாஸ். 37 வயதான இவர் சென்னையில் பிரபல ரவுடிகள் பட்டியலில் உள்ளவர். 1995 ஆம் ஆண்டு பெட்ரோல் பங்கை உடைத்து பணத்தை கொள்ளையடித்ததே இவர் குற்றவாளியாக மாறிய முதல் சம்பவம். அப்போது அவருக்கு வயது 13. அன்று முதல் பல்வேறு வழிப்பறி, கொள்ளை, அடிதடி, மிரட்டல் என பல்வேறு குற்ற வழக்குகள் நவாஸ் மீது பதிவு செய்யப்பட்டது. 

சிறையில் இருந்த காலகட்டத்தில் பல்வேறு ரவுடிகளுடன் ஏற்பட்ட தொடர்பும் அருப்பு நவாஸ் என்ற அடையாளமும் அவரை குற்றங்களை தொடர்ந்து செய்ய வைத்தது. பிரபல ரவுடிகளான பலரும் இவருக்கு தொடர்பில் இருந்ததால்  நவாஸ் தொடர்ந்து பல்வேறு அடிதடி, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டார். பிராண்டட் ஆக உள்ள விலை உயர்ந்த ஆடைகளை அணிவதை விரும்பும் நவாஸ், அதற்காகவே கொள்ளையடிப்பதை தன் தொழிலாக கொண்டதாக கூறுகிறார். இதற்காக விலை உயர்ந்த வாட்ச் கடை,  துணிக் கடைகளில் கதவை உடைத்து கொள்ளையடிப்பது நவாஸின் வழக்கம்... 

2003 ஆம் ஆண்டு அயனாவரம் காவல் உதவி ஆய்வாளரை வெட்டிய வழக்கு என 120க்கும் மேற்பட்ட வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் தான் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தான் திருந்தி வாழ விரும்புவதாக நவாஸ் மனு அளித்துள்ளார். தன் மனைவி, பிள்ளைகளுக்காக மனம் திருந்தி வாழ விரும்பும் இவரின் மனு மீது பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்