சொகுசு கார் மோதி தூக்கி வீசப்பட்ட இளைஞர் : மருத்துவமனையில் சேர்த்த ஆட்டோ ஓட்டுநர் - உதவிய நண்பர்கள்

கோவையில் சொகுசு கார் மோதி தூக்கி வீசப்பட்ட இளைஞர், ஆட்டோ ஓட்டுநர், மற்றும் நண்பர்களின் உதவியால் காப்பாற்றப்பட்டார்.
x
கோவை கொடிசியா சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞர் மீது சொகுசு கார் ஒன்று வேகமாக மோதிவிட்டு சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட அந்த இளைஞர் படுகாயம் அடைந்தார். இதனை பார்த்த அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர்  அந்த இளைஞரை 10 நிமிடத்தில் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். பின்னர் தான் அந்த இளைஞர் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பாலாஜி என்பதும் கோவையில் உள்ள  தனது பாட்டி வீட்டில் தங்கி தனியார் பொறியியல் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார் என்பதும் தெரியவந்தது.

பாலாஜிக்கு விபத்து ஏற்பட்டதை அறிந்த அவரது நண்பர்கள் உடனடியாக அந்த மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைக்கான பணத்தை உடனடியாக செலுத்தினர். இதனையடுத்து பாலாஜிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தகவலறிந்து தஞ்சாவூரில் இருந்து வந்த பாலாஜியின் தந்தை கார்த்திகேயன் தனது மகனுக்கு நிகழ்ந்த துயர சம்பவத்தை பார்த்து வேதனைக்குள்ளானார்.

தனது மகன் உயிரை காப்பற்றியது அவரது நண்பர்கள் தான் என கூறிய கார்த்திக்கேயன், விபத்தை ஏற்படுத்தியவர்கள் தரப்பில் இருந்து ஒருவர் கூட பாலாஜியை பார்க்க வரவில்லை என குற்றம் சாட்டினார். இந்நிலையில் விபத்தை ஏற்படுத்தியது, கோவை குறிச்சியை சேர்ந்த கல்லூரி மாணவி தட்சணா ரூத் என்பது தெரியவந்துள்ளது. அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள பீளமேடு போலீசார், சிசிடிவி காட்சிகளை கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்