மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டம் : மக்கள் கருத்து என்ன...?

ஏழை குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் குறித்து, தமிழகம் முழுவதும், தந்தி குழுமம் பிரமாண்ட கருத்து கேட்பு நடத்தியது.
மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டம் : மக்கள் கருத்து என்ன...?
x
ஏழை குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் குறித்து, தமிழகம் முழுவதும், தந்தி குழுமம் பிரமாண்ட கருத்து கேட்பு நடத்தியது. அதில், இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருப்பது தெரிய வந்துள்ளது

கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசு கொண்டு வந்த முக்கிய திட்டங்களில் ஒன்றான ஆயுஷ்மான் பாரத் திட்டம், தமிழகத்திற்கு பயனளித்துள்ளதா? என்பதை அறிந்துகொள்ள தந்தி டி.வி., தினத்தந்தி நாளிதழ், மாலைமலர் மற்றும் DT next இணைந்து, தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது.

இந்தியா முழுவதும் உள்ள ஏழை குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் கடந்த செப்டம்பர் 23ம் தேதி தொடங்கப்பட்டது. உலகிலேயே மிக பிரம்மாண்டமான மருத்துவ காப்பீட்டு திட்டம் என மத்திய அரசு இதை பெருமையுடன் கூறுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை, ஏற்கனவே இருக்கும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன் மத்திய அரசின் திட்டம் இணைக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்திற்கான அட்டை வைத்திருந்தாலே, பிரதமரின் காப்பீட்டு திட்டத்திலும் பயன் பெறலாம். இதன் மூலம், தமிழ்நாட்டில் இதுவரை 2 லட்சமாக இருந்த மருத்துவ காப்பீட்டு உச்சவரம்பு, 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மாநில அரசு காப்பீட்டில் பயன்பெற, மாத சம்பளம் ரூ.6000-த்திற்கும் குறைவாக இருக்க வேண்டும். மத்திய திட்டம் வருவதற்கு முன்பே, 1.47 கோடி குடும்பங்கள் தமிழக முதலமைச்சரின் மருத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன்பெற்று வந்தன. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பயனாளிகளாக, தமிழ்நாட்டில் 77 லட்சம் குடும்பங்களை மத்திய அரசு கண்டறிந்தது. இவற்றில் 67 லட்சம் குடும்பத்தினர், ஏற்கனவே மாநில அரசு மூலம் பயன்பெற்று வந்தவர்கள். மீதமுள்ள 10 லட்சம் குடும்பங்களை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மத்திய - மாநில திட்டங்கள் இணைக்கப்பட்ட பிறகு, தமிழ்நாட்டில் 1.58 கோடி குடும்பங்கள் இதன் மூலம் பயன்பெறுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஒரு குடும்பத்திற்கு 4 பேர் என்ற அளவில் பார்த்தாலும், 6.32 கோடி மக்கள் மருத்துவ காப்பீட்டின் கீழ் பயன்பெறுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 

மத்திய அரசின் திட்டம் வருவதற்கு முன், ஒன்றரை கோடி குடும்பங்களுக்கான காப்பீட்டு தொகையாக, ஆண்டுக்கு 1100 கோடியை மாநில அரசு கொடுத்து வந்தது. தற்போது, மத்திய அரசு பங்களிப்பாக 538 கோடி கிடைப்பதால், மாநில அரசின் பங்கு 562 கோடியாக குறைந்துள்ளது. 242 அரசு மருத்துவமனைகளிலும், 707 தனியார் மருத்துவமனைகளிலும் இந்த திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறலாம். சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி போன்ற மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் காப்பீட்டு திட்டத்தின் வரம்புக்குள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. ஆனால், அரியலூர், பெரம்பலூர், நீலகிரி மற்றும் திருவாரூர் மாவட்டங்களில், பயனளிக்கும் மருத்துவமனைகள் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலேயே உள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக இந்த காப்பீட்டு திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுவதால், அதன் நீட்சியாகவே மத்திய திட்டத்துடனான இணைப்பு ஏற்பட்டுள்ளது. முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு 7 லட்சம் பேர் சிகிச்சை பெறுவதாகவும், ஒருவரின் சிகிச்சை தொகைக்கு சராசரியாக 25,000 ரூபாய் செலவாகி வருவதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசு திட்டம் இணைக்கப்பட்ட பின், கடந்த அக்டோபர் முதல் ஜனவரி வரையிலான 3 மாதங்களில் மட்டும், ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 843 பேர் பயன்பெற்றுள்ளனர். இவர்களுக்கான சராசரி சிகிச்சை தொகை 276 கோடி ரூபாய். இதில் பெரும்பாலானோர், சிறுநீரக பிரச்சனைகளுக்கு கொடுக்கப்படும் டயாலிசிஸ் சிகிச்சை பெற்றுள்ளனர். இதய அடைப்பு நோய் உள்ளவர்களுக்கு Stent பொறுத்தும் சிகிச்சை இரண்டாம் இடத்திலும், காது கேட்கும் கருவி பொறுத்துதல் மூன்றாம் இடத்திலும் உள்ளது. புற்று நோய்க்கான கீமோதெரபியும், எலும்பு முறிவுக்கான சிகிச்சையும் அடுத்த 2 இடங்களை பிடித்துள்ளன.

Next Story

மேலும் செய்திகள்