வீட்டை ஜப்தி செய்ய நோட்டீஸ் ஒட்டியதால் தற்கொலை முயற்சி

வங்கியில் கடன் வாங்கி கட்டிய வீட்டை ஜப்தி செய்ய நோட்டீஸ் வந்ததால் 3 பேர் தற்கொலைக்கு முயற்சி செய்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
வீட்டை ஜப்தி செய்ய நோட்டீஸ் ஒட்டியதால் தற்கொலை முயற்சி
x
* சென்னை, பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பிரகாஷ், அவரின் வளர்ப்பு தந்தை முரளிதரன், முரளிதரனின் நண்பர்  ரஞ்சித் ஆகியோர் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்துள்ளனர். 

* இதைக் கண்ட வீட்டு  வேலைக்கார பெண், பெரவள்ளுர் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார்.  போலீசார் அவர்களை மீட்டு, சோதனை செய்தபோது, முரளிதரனும்,  ரஞ்சித்தும் உயிரிழந்திருப்பதும், பிரகாஷ் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதும் தெரியவந்தது. 

* இதனையடுத்து  பிரகாஷை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்த போலீசார், முரளிதரன் மற்றும் ரஞ்சித் உடலை பிரேத பரிசோதனைக்கு கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

* பிரகாஷ் வங்கியில் கடன் வாங்கி வீடு கட்டியதும், அதை திருப்பி செலுத்தாததால், அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை ஜப்தி செய்ய நோட்டீஸ் ஒட்டியதும் தற்கொலைக்கு காரணம் என போலீசாருக்கு தெரியவந்துள்ளது.

* அனாதையான பிரகாஷை  முரளிதரன் எடுத்து வளர்த்துள்ளார். சொந்த மகன் வில்லிவாக்கத்தில் தனியாக வசித்து வரும் நிலையில், முரளிதரன் தனது மனைவியுடன்  பிரகாஷ் வங்கியில் கடன் வாங்கி பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் சாலையில் கட்டிய வீட்டில் வசித்து வந்துள்ளார். 

* பிரகாஷ் சிலரிடம் கடன் வாங்கி திருப்பி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து கடன் கொடுத்தவர்கள் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்ததால், விசாரணை காரணமாக பிரகாஷ் தனது வேலையை இழந்ததாக கூறப்படுகிறது.

* கடந்த 6 மாதம் வேலை இல்லாமல் இருந்த நிலையில் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை ஜப்தி செய்ய நோட்டீஸ் வந்தது கண்டு பிரகாஷ் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

* நிலையில், வளர்ப்பு தந்தை முரளிதரன் மற்றும் அவரின் நண்பர்  ரஞ்சித் ஆகியோருடன் சேர்ந்து பிரகாஷ் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதில் 2 பேர் உயிரிழந்த நிலையில் பிரகாஷ் கவலைகிடமான நிலையில் இருக்கிறார். அவருக்கு சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்