உலக காதலர்கள் வரவேற்கும் இந்திய ரோஜா...

உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில், இந்தியாவில் இருந்து அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படும் ரோஜா மலர்கள் பற்றி சுவாரஸ்ய தொகுப்பு.
x
காதலர்களின் அன்பை வெளிப்படுத்த ரோஜா மலர்களுக்கு இணையாக வேறெந்த பரிசுப் பொருளும் இல்லை என்பதால் உலகம் முழுவதும் காதலர்களின் எளிய மொழியாக திகழ்கிறது ரோஜா. அதிலும் இந்தியாவில் தயாராகும் ரோஜா மலர்கள் உலக காதலர்களை வசீகரிக்கிறது என்பதுதான்,  இந்த காதலர் தினத்தில் நம்மை  வசீகரிக்கும் நல்ல செய்தி. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ரோஜா  ஏற்றுமதி கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருவதே இதற்குச் சான்று.  2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 19 கோடி ரூபாய் அளவிற்கு  ஏற்றுமதி செய்யப்பட்ட இந்திய ரோஜாக்கள், 2018 ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சுமார் 23 கோடிக்கும், இந்த ஆண்டு சுமார் 30 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. புனே, நாசிக், பெங்களூர், உத்தராஞ்சல், குஜராத், ஓசூர், ஊட்டி, கொடைக்கானல், இமாச்சலப் பிர தேசம் என பல இடங்களில் ரோஜா உற்பத்தி செய்யப்படுகின்றன. அதில் சுமார் 60 சதவீத உற்பத்தி  ஓசூரில் மட்டுமே நடைபெறுவதுடன், இந்த ஆண்டு ஏற்றுமதியில் ஓசூரில் இருந்து மட்டும் 20  கோடி ரூபாய் அளவிற்கு இருக்கும் என்றும் ஏற்றுமதியாளர்கள் சொல்கின்றனர். நமது நாட்டில் இருந்து 45 க்கும் மேற்பட்ட ரோஜா ரகங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டாலும், உலக சந்தையில் அதிக வரவேற்பு  தாஜ்மஹால், கார்வெட்டா, ரெட் ரோஸ்,  பர்ஸ்ட் ரெட், கிரான்ட்காலா, பிங்க், அவலான்ஜ், ஹரிசம்  உள்ளிட்ட ரகங்களுக்குத்தான்.  அதே நேரத்தில் இந்திய ரோஜாக்களுக்கு போட்டியாக சீனா, ஈக்வெடார், எத்தியோப்பியா, கென்யா, ஹாலந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் ரோஜாக்களுக்கும் வரவேற்பு உள்ளது.

துபாய், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஜப்பான், இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளிலும் காதலர் தினம் சிறப்பாக கொண்டாடப்படுவதால், ரோஜா விற்பனை அதிகரிக்கும் என்றாலும்,  இந்திய ரோஜாக்களுக்கு இங்கிலாந்தில்தான் அதிக வரவேற்பு என்கிறார்கள் ஏற்றுமதி செய்பவர்கள். இதர மலர் சாகுபடிகளைப் போல இல்லாமல், ரோஜா சாகுபடிக்கென்றே தனி பராமரிப்புகள் உள்ளன.  இந்த ஆண்டு அதிக பனியால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் குடில் தோட்டங்கள் அமைத்து ரோஜா உற்பத்தி நடக்கிறது. மொட்டுகள் விரிவடையாமல் இருக்க சரியான நாட்களில் மலர் தொப்பி போடுவதும், அவற்றை சரியான பருவத்தில் அறுவடை செய்வதும் முக்கியம் என்கிறார்கள். உற்பத்தி செய்த ரோஜா மலர்களை ஏற்றுமதிக்கு தயார் செய்ய 20 நாட்களுக்கு முன்னரே பறித்து குளிர்பதன கிடங்குகளில் பராமரிக்க வேண்டும். ஆனால் அந்த வசதி சிறு விவசாயிகளுக்கு சாத்தியமில்லை என்பதால், ஓசூரில் டான்ப்ளோரா என்கிற மையத்தினை அரசு உருவாக்கியது. ஆனால் அது செயல்படாமல்  உள்ளதால் ஏற்றுமதியை மேலும் அதிகரிக்க முடியவில்லை என்பதையும் விவசாயிகள் குறிப்பிடுகின்றனர். செலவுகள் அதிகரிப்பு, சர்வதேச சந்தையில் போட்டி,  பருவ நிலை மாற்றத்தல்  விளைச்சல் பாதிப்பு என பல சவால்களுடன் ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத் துக்காக ரோஜா மலர்களை ஏற்றுமதி செய்கிறார்கள் விவசாயிகள்.  காதலர்கள் தினத்திலாவது ரோஜாவுக்கு நல்ல விலை கிடைக்கட்டும், விவசாயிகள் முகத்தில் மகிழ்ச்சி பூக்கட்டும்.

Next Story

மேலும் செய்திகள்