கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு உத்தரவாதம் அளித்தால் போராட்டத்தை கைவிட தயார் - இடைநிலை ஆசிரியர்கள்

மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள், தங்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசு உத்தரவாதம் அளித்தால் போராட்டத்தை கைவிட தயார் என அறிவித்துள்ளனர்.
x
சமவேலைக்கு சம ஊதியம், 7வது ஊதியக் குழுவில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை இடைநிலை ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தங்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற கோரி, திங்கட்கிழமை சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் போராட்டம் நடத்திய மூவாயிரத்திற்கும் அதிகமான இடைநிலை ஆசிரியர்களை அப்புறப்படுத்திய போலீசார், எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் தங்கவைத்திருந்தனர். அங்கு அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கிய நிலையில்,  அடுத்தடுத்து ஆசிரியர்கள் சிலர் மயக்கமடைந்தனர். இதனால் பரபரப்பு நிலவியது. இதையடுத்து, ஆசிரியர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறுமாறு, போலீசார் அறிவுறுத்தியதை அடுத்து, நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகம் நோக்கிச் சென்ற ஆசிரியர்கள் அங்கு தங்களது உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள   இடைநிலை ஆசிரியர்கள், உடனடியாக பணிக்கு திரும்புமாறு, தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், அரசின் நிதி வருவாயை பொறுத்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். 

ஆனால், தங்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசு என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாக உத்தரவாதம் அளித்தால் போராட்டத்தை கைவிட தயார் என இடைநிலை ஆசிரியர் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். தொடரும் போராட்டத்தில் இதுவரை 26 ஆண்கள், 48 பெண்கள் என 74 ஆசிரியர்கள் மயக்கம் அடைந்தனர். இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை தி.மு.க. தலைவர் ஸ்டாலின், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து, ஆதரவு தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்