நூலக துறையை கண்டுகொள்ளாத தமிழக அரசு

பொது நூலகத்துறைக்கென தனி அதிகாரிகள் நியமிக்கப்படாமல் இருப்பதால், தமிழகம் முழுவதும் நூலகங்கள் பல்வேறு நிர்வாக சிக்கல்களில் சிக்குண்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
x
தமிழக அரசின் பொது நூலகத் துறை சார்பாக, மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் அதிகமான நூலகங்கள் இயங்கி வருகின்றன. மாவட்ட வாரியாக நூலக அலுவலர்கள், நூலகங்களை நிர்வாகம் செய்து வருகின்றனர் . தற்போதைய நிலவரப்படி 12 மாவட்டங்களில் மாவட்ட நூலக அதிகாரிகள் பணியிடம் காலியாக இருக்கின்றன. குறிப்பாக நூலகத்துறைக்கு என்று, தனி இயக்குனர், இணை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் நியமிக்கப்படாததால், ஒட்டுமொத்த துறையே ஸ்தம்பித்துப்போய் இருக்கக்கூடிய சூழல் உருவாகியிருப்பதையும் கோடிட்டு காட்டுகின்றனர். 

2012 ஆம் ஆண்டில் இருந்து, கல்வித்துறையை சேர்ந்த இயக்குனர்களும், இணை இயக்குனர்களும், இந்த துறையை கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகின்றனர். நூலகத்துறைக்கு வரவேண்டிய பல ஆயிரம் கோடி வரி வருவாய் இதுவரை வசூலிக்கப்படாமல் நிலுவையில் இருக்கின்ற அவலத்தையும் நூலகத்துறை பணியாளர்கள் சுட்டி காட்டுகின்றனர். தமிழகத்தில் பதிப்பாளர்களுக்கும், தரமான புத்தகங்களுக்கும் பஞ்சமில்லாத நிலை இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் நூலகங்களுக்கு புத்தகங்களை கொள்முதல் செய்யாமல், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. 

சென்னை மாவட்ட நூலகங்களுக்கான நிதி, அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு மாற்றப்படுவதால், பணியாளர்களுக்கு சம்பளம் கூட வழங்க முடியாத ஒரு கடுமையான சூழல் ஏற்பட்டிருக்கிறது என்றும், சென்னை மாவட்டத்தில் உள்ள 157 நூலகங்களில் ஏராளமான பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன என்பதும் சங்க நிர்வாகிகளின் குற்றச்சாட்டாக இருக்கிறது.

இதுபோன்ற நிலை மாற வேண்டும் என்பதும், நூலகத்துறைக்கு அரசு உரிய முக்கியத்துவம் தர வேண்டும் என்பதும் பதிப்பாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்