பறவை இனங்களை பாதுகாப்பது குறித்து 2.O படத்தை போலவே பறவைகளுக்கு உணவளித்து வரும் ஒரு பறவை மனிதர்

பறவை இனங்களை பாதுகாப்பது குறித்து வெளியான 2 பாயிண்ட் ஓ படத்தை போலவே சென்னையில் பல ஆண்டுகளாக பறவைகளுக்கு உணவளித்து வரும் ஒரு பறவை மனிதர் குறித்து ஒரு செய்தித் தொகுப்பு
x
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி உள்ள 2 பாயிண்ட் ஓ படம் பறவை இனங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சென்றது. அந்த வரிசையில் சென்னையில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பறவைகளுக்கு உணவளிப்பதோடு, அவற்றுக்கு அடைக்கலம் கொடுக்கும் ஒரு மனிதராக இருக்கிறார் சேகர்.

சென்னை ராயப்பேட்டை பகுதிக்குள் நுழைந்தால் பறவை மனிதர் வீடு என்பதே இவரின் அடையாளமாக இருக்கிறது. காலையும் மாலையும் கொஞ்சும் கிளிகளின் சத்தமே இவரின் வீட்டு முகவரி. ஆரம்பத்தில் சில கிளிகளுக்கு உணவளித்து வந்த இவரின் மனிதநேயம் இன்று ஆயிரக்கணக்கான பறவைகளுக்கு உணவளிக்கும் எண்ணத்தை உருவாக்கி இருக்கிறது.

மரங்களும், இயற்கையான சூழலும் அழிந்து விட்டதால் போதிய உணவில்லாமல் சென்னையில் சுற்றி வரும் பறவைகள் இவரின் வீட்டில் உணவு தேடி அடைக்கலம் ஆகிறது. இங்கு வரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகளுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக உணவளித்து வருகிறார் சேகர்.

ஒவ்வொரு காலத்திற்கு ஏற்றார் போல பறவைகளின் எண்ணிக்கை கூடும், குறைவும் என்றாலும் கூட, இங்கு வரும் பறவைகள் பசியாறிய பிறகு மகிழ்ச்சியாக கூச்சலிட்ட படி பறந்து செல்வது தனக்கு மன நிம்மதியளிப்பதாக கூறுகிறார் இந்த பறவை மனிதர்.

செல்போன் டவர்களினால் பறவைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறும் இவர், மரங்களை வளர்க்க வேண்டியதன் அவசியம் குறித்தும் மக்களிடம் விளக்குகிறார். பறவைகளின் வாழ்வாதாரமாக இருக்கும் மரங்கள், நீர்நிலைகள் என இயற்கை ஆதாரங்களை பாதுகாப்பதே நம் தலைமுறைக்கு அத்தியாவசியமானது.

Next Story

மேலும் செய்திகள்