தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம் : தருண் அகர்வால் அறிக்கை சொல்வது என்ன?

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது நீதிக்கு எதிரானது என டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், மூவர் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
x
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை  மூடப்பட்டது நீதிக்கு எதிரானது என டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில்,  மூவர் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதனால் ஆலையை திறக்க அனுமதி அளிக்கலாம் என அந்த குழு பரிந்துரை செய்துள்ளது. 


ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டத்தை எதிர்த்து அந்த நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தை அணுகியிருந்தது. இந்த பிரச்சனையை தீர்க்க, தீர்ப்பாயத்தின் சார்பில் மேகாலயாவின் முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டது. 

இந்த குழு, ஸ்டெர்லைட் ஆலையை நேரில் பார்வையிட்டதோடு மட்டுமின்றி, தூத்துக்குடியிலும் சென்னையிலும் மக்களிடம் கருத்து கேட்கும் கூட்டங்களையும் நடத்தியது. இதன் பின், பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் உத்தரவு இயற்கை நீதிக்கு எதிரானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் நிறுவனம் தன்னுடைய கருத்தை தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும் அறிக்கையில் சுட்டிகாட்டியுள்ளது. தமிழக அரசாணையில் கூறப்பட்டுள்ள காரணங்கள், ஆலையை நிரந்தரமாக மூடும் அளவிற்கு கடுமையானவை இல்லை என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதிப்பதற்கு, சில நிபந்தனைகளை விதிக்கலாம் எனவும் இந்த குழு பரிந்துரை செய்துள்ளது. ஆலையை சுற்றிய கிராமங்களில், மாதம் ஒரு முறை நிலத்தடி நீரை ஆய்வு செய்து, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாவட்ட ஆட்சியர், மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரி, தொண்டு நிறுவனங்கள் மற்றும் நிபுணர்கள் அடங்கிய குழு, ஆலையின் கழிவுகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி 25 மீட்டர் அகலத்திற்கு மரங்கள் அதிகம் கொண்ட பசுமை பகுதி ஏற்படுத்த வேண்டும்.  

அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் மூலம் தகவல் சேகரித்து, ஆலையை சுற்றிய பகுதிகளில் ஏற்படும் நோய்களை தமிழக அரசு கணக்கெடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சல்பர் டையாக்சைட் கசிவு பற்றிய அச்சத்தை போக்க, ஆலையிலுள்ள புகை போக்கியின் உயரம் அதிகரிக்கப்பட வேண்டும். அதை அதிகரிக்கும் வரை, தற்போது இருக்கும் உயர்த்திற்கு ஏற்றார்போல் தாமிர உற்பத்தியை குறைக்க வேண்டும் எனவும் கூறப்பப்பட்டுளளது. 

இப்படி பல்வேறு நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்று தருண் அகர்வால் அறிக்கை கூறியுள்ளது. அறிக்கை மீது ஒரு வாரத்திற்குள் தமிழக அரசு  கருத்து தெரிவிக்க வேண்டும் என கூறி, வழக்கை டிசம்பர் 7ம் தேதிக்கு பசுமை தீர்ப்பாயம் ஒத்திவைத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்