கஜா சீரமைப்புப் பணிகள் : பிரமிக்க வைத்த மின் வாரிய ஊழியர்களின் உழைப்பு...

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மின் வினியோகம் கொண்டு செல்லும் முனைப்பில் தீவிரமாக பணியாற்றிவரும் மின்வாரிய ஊழியர்கள், இடுப்பளவு தண்ணீரில் 260 கிலோ எடை கொண்ட மின் கம்பங்களை 10 நிமிடத்தில் நட்டுவைத்துள்ளனர்.
x
கஜா புயலில் ஒட்டுமொத்த மின்கம்பங்களும் அடியோடு சாய்ந்ததால்,வேதாரண்யம், கோடியக்கரை, வேளாங்கண்ணி, புஷ்பவனம் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன. மின் கம்பங்களை சீர் செய்யும்  பணியில் திருநெல்வேலி, ஈரோடு, திருப்பூர் கோவை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மின்வாரிய ஊழியர்கள் இரவு பகல் பாராமல் கொட்டும் மழையில் ஈடுபட்டுள்ளனர். 

விழுந்தமாவடி பகுதியில் இடுப்பளவு தண்ணீரில் 260 கிலோ எடைகொண்ட 8 மீட்டர் உயரமுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மின்கம்பங்களை தூக்கி சென்ற மின் ஊழியர்கள், அதனை  தண்ணீரில் மூழ்கியபடி 10 நிமிடத்தில் நட்டு நிற்கவைத்தது அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் இருளில் தவித்து வருவதால் அவர்களுக்கு வெளிச்சம் தரவே தாங்கள் இதுபோன்ற சவாலான பணிகளை மேற்கொள்வதாக மின்வாரிய ஊழியர்கள் கூறுகின்றனர். கொட்டும் மழையிலும் சிரமம் பார்க்காமல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மின்சாரத்தை கொண்டு செல்லும் பணியை அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்துவரும் மின்வாரிய ஊழியர்களை அப்பகுதி மக்கள் பாராட்டுகின்றனர்.

புதுக்கோட்டை : உயிரை பணயம் வைத்து பணியாற்றும் வெளிமாவட்ட ஊழியர்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில், கஜா புயலால், 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. இவற்றை சீரமைக்கும் பணியில் சுமார் 5 ஆயிரம் மின் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால், 20 சதவீத பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று பிற்பகலில் பல்வேறு இடங்களில் மழை தொடங்கியபோதும், அதை பொருட்படுத்தாமல் மின்வாரிய ஊழியர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபட்டனர். உயிரை பணயம் வைத்து, அர்ப்பணிப்புடன் பணியாற்றும் மின்வாரிய ஊழியர்களை அங்குள்ள பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்