ரயலில் ரூ.5.78 கோடி கொள்ளை போன விவகாரம் : கொள்ளை கும்பல் தலைவன் மோஹர்சிங் வாக்குமூலம்

ஓடும் ரயிலில் 5 கோடியே 78 லட்ச ரூபாயை கொள்ளையடித்தது எப்படி என்பது குறித்து வட மாநில கொள்ளையர்கள், சிபிசிஐடி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
ரயலில் ரூ.5.78 கோடி கொள்ளை போன விவகாரம் : கொள்ளை கும்பல் தலைவன் மோஹர்சிங் வாக்குமூலம்
x
கடந்த 2016 ஆம் ஆண்டு வட மாநில கொள்ளை கும்பல் தமிழ்நாடு வந்திறங்கி, விழுப்புரம், திண்டிவனம், விருத்தாசலம், சேலம், பாண்டிச்சேரி, அரக்கோணம் ஆகிய இடங்களில் தங்கியதாக கூறப்பட்டுள்ளது. 

இவர்களது கும்பலைச் சேர்ந்த ஒருவன் சேலத்தில் இருந்ததாகவும், அவன் மூலம் ரயிலில் பணம் வரும் தகவல் இவர்களுக்கு கிடைத்ததாகவும் கூறப்படுகிறது. 
 
இவர்கள் அனைவரும், ரயில் நிலையங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளை நோட்டமிட்டு, ஒரு வாரத்திற்கும் மேலாக, அயோத்தியாபட்டினம் - விருத்தாசலம் இடைப்பட்ட பகுதியை ரயிலில் பயணித்து கண்காணித்து வந்துள்ளனர். 

பின்னர், சின்ன சேலத்திலிருந்து விருத்தாசலம் வரையிலான பாதையில், 45 நிமிடங்கள், ரயில் நிற்காமல் செல்லும் என்பதை கண்டறிந்து, அந்நேரத்தில் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். 
 
கொள்ளை நிகழ்ந்த தினத்தில், சின்ன சேலத்தில் மோஹர்சிங் மற்றும் அவனது கூட்டாளிகள், ஏறியதாகவும், பின்னர் ரயில் கூரை மீது ஏறி, பேட்டரியால் இயங்க கூடிய கேஸ் கட்டர்களை கொண்டு, ரயிலின் கூரையை, துளையிட்டதாக  கொள்ளையர்கள், வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். 
 
இதனையடுத்து, பணம் வைக்கப்பட்டிருந்த மரப்பெட்டிகளை உடைத்து, ரூபாய் நோட்டு கட்டுகளை கொள்ளையடித்துள்ளனர். 

லுங்கியில் பணத்தை சுருட்டி மூட்டையாக கட்டிய கொள்ளையர்கள், விருத்தாசலம் ரயில் நிலையம் அருகே, வயலூர் மேம்பாலம் அருகே காத்திருந்த கூட்டாளிகளிடம், பண மூட்டைகளை வீசியுள்ளனர். 

பின்னர், விருத்தாசலம் வந்தடைந்த ரயிலின் வேகம் குறைந்ததும், அங்கிருந்து தப்பியதாக, வட மாநில கொள்ளையன் மோஹர் சிங் வாக்குமூலம் அளித்ததாக, சிபிசிஐடி போலீசார் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

கொள்ளை அடித்த மூன்று மாதங்களில் 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால், பெரும்பாலான 500 ரூபாய் நோட்டுக்களை அழித்து விட்டதாக வாக்குமூலத்தில் வட மாநில கொள்ளையர்கள் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்