4 வயது குழந்தை பாலியல் பலாத்காரம் : குற்றவாளியை கைது செய்ய கோரி மக்கள் சாலை மறியல்
திருப்பூரில் 4 வயது பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளியை உடனடியாக கைது செய்ய கோரி பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் போயம்பாளையம் பகுதியை சேர்ந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இரவில், தாய் வேலைக்கு சென்றதால் தந்தையுடன் இரண்டு குழந்தைகளும் தூங்கியுள்ளனர். நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர், 4 வயது பெண் குழந்தையை மாடிக்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
தாய் காலையில் வந்து குழந்தையை தேடிய போது குழந்தை மாடியில் அழுது கொண்டிருந்ததை கண்டு, குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்தது. இந்நிலையில் திருப்பூர் அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
தகவலறிந்த அப்பகுதி மக்கள் 300 க்கும் மேற்பட்டோர் குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்க கோரியும், குற்றவாளியை உடனடியாக கைது செய்ய கோரியும் போயம்பாளையம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த போலீசாரிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிறுமிக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், குற்றவாளியை கைது செய்யவும் நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
Next Story