நிர்மலா தேவியின் பரபரப்பு வாக்குமூலம்...

சிபிசிஐடி போலீசாரிடம் நிர்மலா தேவி அளித்த முழு வாக்குமூலம்.
நிர்மலா தேவியின் பரபரப்பு வாக்குமூலம்...
x
கல்லூரி மாணவிகளை போன் மூலம் தொடர்பு கொண்டு தவறான பாதைக்கு அழைத்த அருப்புக்கோட்டையைச் சேர்ந்த நிர்மலா தேவி, கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  அவரை சிபிசிஐடி போலீஸார் 4 நாள் காவலில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் அளித்த வாக்குமூலம், இன்றைய தினத்தந்தி நாளிதழில் வெளியாகியுள்ளது. அந்த வாக்குமூலத்தில், கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால், அவரை விட்டு பிரிந்ததாகவும், பின்னர் பலருடன் தனக்கு தொடர்பு ஏற்பட்டதாகவும் நிர்மலா தேவி கூறியுள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடந்த புத்தாக்க பயிற்சியில் சேருவது தொடர்பாக உதவி பேராசிரியர் முருகனை தொடர்பு கொண்டேன் என்றும், அவருடன் உறவு இருந்ததாகவும் நிர்மலாதேவி கூறியுள்ளார்.



அப்போது தன்னிடம் முருகன், ஒத்துழைப்பு கொடுக்கிற  மாணவிகள் யாராவது இருக்கிறார்களா எனக், கேட்டதாகவும், தற்போது நிலவரம் சரியில்லை என்றும், இப்போது வேண்டாம் என கூறிவிட்டதாகவும் நிர்மலா தெரிவித்துள்ளார். தன்பின்னர், கடந்த மார்ச் மாதம் காமராஜர் பல்கலைக்கழகத்தில் புத்தாக்க பயிற்சியில் சேருவதற்கான உத்தரவு வந்ததாகவும், அப்போது முருகனை சந்திக்கும்போது, கல்லூரி மாணவிகளிடம் பேசி ஏற்பாடு செய்ய முடியுமா என, அவர் கேட்டதாகவும் நிர்மலா தேவி கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து முருகன், பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் கருப்பசாமியை அறிமுகப்படுத்தி வைத்ததாகவும், பின்னர் அவருடனும் உறவு இருந்ததாகவும் நிர்மலா தேவி பகிரங்கமாக தெரிவித்துள்ளார். முருகன், கருப்பசாமி ஆகியோர் தொடர்ந்து வலியுறுத்தியதால், கல்லூரி மாணவிகளுக்கு செல்போனில் சூசமாக பல குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், அதனை மேலும் 3 மாணவிகளுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டதாகவும், நிர்மலா தேவி கூறியுள்ளார். 



"மாணவிகள் வேண்டும் என முருகனும், கருப்பசாமியும் கேட்டனர்"

மாணவிகள் வேண்டும் என உதவிப் பேராசிரியர் முருகனும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியும் தான் கேட்டதாக பேராசிரியை நிர்மலா தேவி வாக்குமூலம் அளித்துள்ளார். மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தின் 2-வது பகுதி இன்றைய தினத்தந்தியில் வெளியாகியுள்ளது. அதில், மார்ச் 13-ந் தேதியன்று, காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு தான் சென்றதாகவும், அப்போது அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறிவியல் கண்காட்சியை திறந்து வைக்க ஆளுநர் வருவதை அறிந்து கொண்டதாகவும் நிர்மலா தெரிவித்துள்ளார். ஆளுநரை முதன் முறையாக பார்க்கும் ஆவலில், அவர் ரிப்பன் வெட்டிய காட்சியை, தனது செல்போனில் படம் பிடித்ததாகவும், அந்த வீடியோவை, தனது மகள், மாணவிகள், பேராசிரியர்கள் என பலருக்கும் அனுப்பியதாக தெரிவித்துள்ளார். தனக்கு அதிகமான செல்வாக்கு இருப்பதாக மாணவிகள் நம்பி, தனது பேச்சை கேட்பார்கள் என்ற எண்ணத்துடன் அந்த வீடியோவை அனுப்பியதாகவும் நிர்மலா தேவி குறிப்பிட்டுள்ளார். மார்ச் 15-ஆம் தேதியன்று, மாணவிகள் 4 பேரும் ஒரே இடத்தில் இருப்பதை அறிந்து கொண்டு, அவர்களுக்கு போன் செய்து பேசியதாகவும், பேச்சின் போது, உயரதிகாரி என தான் குறிப்பிட்டது, துணை வேந்தர், பதிவாளர் ஆகிய இருவரை நினைத்து தான் என்றும் தெரிவித்துள்ளார். "அவர்கள் கொஞ்சம் எதிர் பார்க்கிறார்கள்" என்று சொன்னது, முருகன், கருப்பசாமி ஆகியோர் "மாணவிகள் வேண்டும்" என கேட்டு கொண்டதைத்தான் என்றும் தெரிவித்துள்ள நிர்மலா, "என்கிட்ட கேட்டுக்கிட்டே இருக்காங்க" என்று சொன்னது கருப்பசாமியை குறிப்பிட்டு தான் என்றும் கூறியுள்ளார். தனக்கு ஆளுநரை தெரியும் என கூறினால், மாணவிகள் உடனடியாக சம்மதிப்பார்கள் என கருதி, "ஆளுநர் தாத்தா இல்லை" என்று கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 



"4 மாணவிகளை தவிர இதற்கு முன் வேறு யாரையும் தவறான பாதைக்கு அழைக்கவில்லை"

மார்ச் 20-ஆம் தேதியன்று காமராஜர் பல்கலைக்கழகத்தில், புத்தாக்கப் பயிற்சியில் இருந்தபோது, தேவாங்கூர் கல்லூரியில் இருந்து கடிதம் வந்ததால், மனிதவள மேம்பாட்டு அதிகாரியிடம் இருந்து கடிதத்தை பெற்றுக் கொண்டு, கல்லூரிக்கு சென்றதாக நிர்மலா தேவி தெரிவித்துள்ளார். அதன்பிறகு, கல்லூரியில் இருந்து தான் இடை நீக்கம் செய்யப் பட்டதாகவும், பின்னர் மதுரை வந்து, இடைநீக்கம் குறித்து முருகனிடம்  சொன்னதாகவும் நிர்மலா தேவி தெரிவித்துள்ளார். தனது கணவர் மூலம், இடைநீக்கம் செய்யப்பட்டதற்கான காரணத்தை அறிந்து கொண்டதாகவும், ஏப்ரல் ஒன்றாம் தேதியன்று, செய்தியாளர் ஒருவர் தன்னிடம், ஆடியோ குறித்து கேட்டதால், பதறிப்போய் பல்கலைக் கழக அதிகாரிக்கு போனில் தகவலை சொன்னதாகவும் நிர்மலா தெரிவித்துள்ளார். அப்போது அவர், முருகனுக்கும், கருப்பசாமிக்கும் இதே வேலை என்றும், துணைவேந்தர் அல்லது பதிவாளருக்காக இந்த ஏற்பாட்டைச் செய்யச் சொல்லியிருக்கலாம் என அவர் கூறியதாகவும் நிர்மலா தெரிவித்துள்ளார். ஏப்ரல் 6-ந் தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சென்று முருகனை நேரில் சந்தித்ததாகவும், அப்போது அவர் தனக்கு உதவி செய்வதாய் உறுதியளித்ததாகவும் நிர்மலா தேவி தெரிவித்துள்ளார்.



பின்னர் ஏப்ரல் 8-ஆம் தேதியன்று முருகனை சந்தித்ததாகவும், அவர், கருப்பசாமியால் நடுத்தெருவுக்கு வந்து விட்டோம் எனக் கூறி, 50 ஆயிரம் ரூபாய் பணம் தந்ததாகவும் நிர்மலா தெரிவித்துள்ளார். அன்று இரவு கருப்பசாமியை போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது, அவர் தனது எண்ணை 'பிளாக்'  செய்து விட்டதாகவும், சில நாட்களுக்குப் பின், முருகனிடம் இருந்தும் பதில் வரவில்லை என்றும் நிர்மலா, தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார். தன்னை சிறையில், யாரும் பார்க்க வரவில்லை என்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் ஆகிய யாரையும் தனிப்பட்ட முறையில் தனக்கு தெரியாது என்றும் குறிப்பிட்டுள்ள நிர்மலா தேவி, அறிவியல் கண்காட்சியை திறந்து வைக்க வந்தபோதுதான் ஆளுநரை நேரில் பார்த்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த 4 மாணவிகளை தவிர இதற்கு முன் வேறு யாரையும் தவறான பாதைக்கு அழைக்கவில்லை என்றும் நிர்மலா தேவி தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். 



நிர்மலா தேவி பரபரப்பு குற்றசாட்டு : மறுக்கும் முருகன், கருப்பசாமி

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட உதவி பேராசிரியர் முருகன், கருப்பசாமி ஆகியோர்  மதுரை மத்திய சிறையில் இருந்து  ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்துக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், தாங்கள்  எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், நிர்மலா தேவி தங்களை பற்றி  கூறியது அனைத்தும் பொய் எனவும் தெரிவித்தனர்.



Next Story

மேலும் செய்திகள்