மூளை பாதித்த சிறுவனை குணப்படுத்த முடியாது - நிபுணர்கள் குழு அளித்த அறிக்கையை படித்து கண்கலங்கிய நீதிபதி கிருபாகரன்

மூளை பாதிப்புக்குள்ளான சிறுவனை நிரந்தரமாக குணப்படுத்த முடியாது என மருத்துவ நிபுணர்கள் குழு அளித்த அறிக்கையை படித்து உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கண்கலங்கினார்.
மூளை பாதித்த சிறுவனை குணப்படுத்த முடியாது - நிபுணர்கள் குழு  அளித்த அறிக்கையை படித்து கண்கலங்கிய நீதிபதி கிருபாகரன்
x
வலிப்பு நோய் மற்றும் மூளை பாதிப்புக்கு உள்ளான தனது 10 வயது மகனை , கருணைக் கொலை செய்ய அனுமதிக்க கோரி கடலூரை  சேர்ந்த திருமேனி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், பாஸ்கரன் ஆகியோர் அடங்கிய அமர்வு, சிறுவனை பரிசோதனை செய்ய  மருத்துவ நிபுணர் குழுவை  நியமித்து உத்தரவிட்டது. கடலூரிலிருந்து சென்னை அழைத்து வரப்பட்ட அச்சிறுவனுக்கு,  சென்னை அரசு  பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. 



இந்த வழக்கு மீண்டும்  விசாரணைக்கு வந்த போது,  மருத்துவ நிபுணர்கள்  குழு அறிக்கை தாக்கல் செய்தது. அதை படித்துப் பார்த்த நீதிபதிகள், சிறுவனை நிரந்தரமாக குணப்படுத்த முடியாது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டனர். அப்போது நீதிபதி கிருபாகரன் கண்கலங்கினார். சிறுவனை பராமரித்துக் கொள்ள தொண்டு நிறுவனம் தயாராக இருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதை ஏற்க, அச்சிறுவனின் தந்தை  மறுத்து விட்டார். இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோருக்கு மாதாந்திர நிதியுதவி வழங்க முடியுமா , மருத்துவ உதவி வழங்க முடியுமா என்பது குறித்து பதிலளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
விசாரணையை வரும் 23ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்