தமிழகம் முழுவதும் பரவலாக மழை...

தமிழகம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்துள்ளது.
தமிழகம் முழுவதும் பரவலாக மழை...
x
சென்னை : 

சென்னையில் நள்ளிரவு முதல் பல்வேறு பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்துள்ளது. அடையாறு , மந்தைவெளி , திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில், சுமார் 20 நிமிடங்கள் வரை மழை பெய்தது. மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சத்தியமங்கலம் :

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் மல்லி அம்மன் கோயில் அருகே மழை 
நீர் அருவியாக கொட்டியது.  மழை நீர் சாலையை கடந்து வனப்பகுதி ஓடை வழியாக பெரும்பள்ளம் அணைக்கு சென்றது. அருவியாக கொட்டிய மழைநீரை கண்ட வாகன ஓட்டிகள் செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.தஞ்சாவூர் :

தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இரவு தொடங்கிய மழை அதிகாலை வரை நீடித்தது. திருவையாறு, வல்லம், கரந்தை உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது. மழையால், தஞ்சாவூர் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

திருச்சி :

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மிதமான மழை பெய்தது. மாணவர்கள் மழையில் நனைந்தபடி பள்ளி, கல்லூரிகளுக்கு சென்றனர். மழை காரணமாக வெப்பம் தணிந்து, மணப்பாறையில் இதமான சூழல் நிலவுகிறது. 

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் பெய்த மழையால், கொளவாய் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. உத்திரமேரூர், மதுராந்தகம், திருக்கழுக்குன்றனம் ஆகிய இடங்களிலும் மழை பெய்தது. மழை தொடர்ந்தால், ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

திருவள்ளூர் :

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் கனமழை கொட்டி தீர்த்தது. பலத்த காற்றுடன் பெய்ததால், ஆங்காங்கே மரக்கிளைகள் முறிந்து சாலையில் விழுந்தன. மழை, காற்று காரணமாக திருத்தணியில் சுமார் 3 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. "மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்" - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை 

ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவர்கள் வரும் 5ஆம் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேபோல், தமிழக மீனவர்கள் 5ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை குமரி, லட்சத்தீவு, தெற்கு கேரளா, தென்கிழக்கு மத்திய அரபிக்கடல் ஆகிய பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

"தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிதமான மழை" - வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 தினங்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அந்த மையத்தின் இயக்குநர் பாலசந்திரன், தென்கிழக்கு அரபிக்கடலில் அக்டோபர் 6ஆம் தேதி புயல் உருவாகும் சூழல் நிலவுவதாக கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்