வழுக்கை டயர்களுடன் ஓடும் 8,000 அரசு பேருந்துகள்...

தமிழகத்தில் 8 ஆயிரம் அரசு பேருந்துகளின் டயர்களை பலமுறை மீண்டும் மீண்டும் புதுப்பித்து இயக்கும் நிலைமை தொடர் கதையாக மாறியுள்ளது.
வழுக்கை டயர்களுடன் ஓடும் 8,000 அரசு பேருந்துகள்...
x
7 அரசு போக்குவரத்து கழகங்களின் மூலம் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் தமிழகத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகளில் 60 சதவீதத்துக்கும் மேலான பேருந்துகள், ஆயுட்காலம் முடிந்த பேருந்துகளாக உள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். போக்குவரத்து கழகங்களுக்கு அவ்வப்போது புதிய பேருந்துகள் வழங்கப்பட்டாலும், அதிகளவில் பழைய பேருந்துகளை மாற்ற வேண்டிய நிலை உள்ளதாகவும் தொழிலாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக பெரும்பாலான பேருந்துகளின் டயர்கள் மோசமான நிலையில் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். போக்குவரத்து கழகங்களுக்கு நாள் ஒன்றுக்கு 9 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதால், நிதி நிலைமையை காரணம் காட்டி, டயர் உள்ளிட்ட பிற உதிரி பாகங்களை வாங்காமல், இருப்பதை கொண்டு சமாளித்து வருவதற்கு மோசமான நிலையில் ஓடும் பேருந்துகளே  சாட்சி என்கின்றனர் போக்குவரத்து கழக தொழிலாளர்கள். விபத்தை ஏற்படுத்தும் அபாயத்துடன் தமிழகத்தில் 8 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக தொ.மு.ச. பேரவை பொருளாளர் நடராஜன் கூறுகிறார். ஒரு காலத்தில் அதிக கிலோ மீட்டர் தொலைவுக்கு,  டயர்களை பயன்படுத்தியதற்காக விருது பெற்ற தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள், டயர்களை புதுப்பித்தல் முறைப்படி, 3 முறை மட்டுமே பயன்படுத்துவதற்கு பதில், நிதி நிலையை காரணம் காட்டி,  8 முறை என்ற அளவுக்கு டயர்களை புதுப்பித்து ஓட்டும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாக கூறுகிறார் அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளன பொது செயலாளர் பத்மநாபன்..அதி நவீன பேருந்துகளை இயக்க விரும்பும் அதே நேரத்தில், மோசமான டயர்களை மாற்றி பேருந்துகளை இயக்க முன்வர வேண்டும் என்பதே ஒட்டு மொத்த பயணிகளின் விருப்பமாக உள்ளது.



Next Story

மேலும் செய்திகள்