கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணி கடலூரில் மும்முரம்

கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணி கடலூரில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணி கடலூரில் மும்முரம்
x
புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி 10 நாட்கள் வரை நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. நவராத்திரி, தசரா, துர்கா பூஜை என பல பெயர்களில் பல மாநிலங்களில் இந்த விழா உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இந்த நவராத்திரி பண்டிகைக்கு 9 நாட்களும் வீடுகளில் கொலு வைப்பது வழக்கம். வீடுகளில் கொலு பொம்மைகளை வைத்து விரதம் இருந்து வழிபாடு நடத்தினால் நினைத்தது நிறைவேறும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது. 

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கொலு பண்டிகைக்கான பொம்மைகள் தயாரிக்கும் பணி கடலூர் மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  கடலூர் மாவட்டம் பழைய வண்டிப்பாளையத்தில் கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். சீனிவாச கல்யாணம், வள்ளி கல்யாணம், பொங்கல் செட், அஷ்ட லட்சுமி, ராவணா தர்பார் உள்ளிட்ட 40 வகையான செட் பொம்மைகள் கண்களை கவரும் வகையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. 

ஒரு பொம்மையின் விலை 50 ரூபாயில் இருந்து கிடைக்கிறது. கொலு பொம்மை செட் 4 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாவதாக கூறப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் பொம்மைகள் தமிழகம் மட்டுமின்றி பெங்களூரு, மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதே நேரம் பொம்மைகளை செய்வதற்கு தேவையான களிமண்ணை அரசு இலவசமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் தொழிலாளர்கள் சார்பாக முன்வைக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்