சிலை திருட்டு வழக்குகளில் திடுக்கிடும் தகவல்கள்..!

திருட்டு போன 30 கோடி மதிப்பிலான நடராஜர் சிலை உள்ளிட்ட சிலைகளை ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான விசாரணை குழுவினர் கண்டறிந்துள்ளனர்.
சிலை திருட்டு வழக்குகளில் திடுக்கிடும் தகவல்கள்..!
x
தமிழக கோயிலில் இருந்து திருடிச்செல்லப்பட்ட நடராஜர் சிலையை ஆஸ்திரேலிய அருங்காட்சியகம் 30 கோடிக்கு வாங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் அமைந்துள்ள குலசேகரமுடையார் அறம்வளர்த்த நாயகி அம்மன் கோயிலில், 1982 ஆம் ஆண்டு திருடப்பட்ட 4 ஐம்பொன் சிலைகள் 36 ஆண்டுகளாக கண்டுபிடிக்கப்படாத நிலையில், ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான புலன் விசாரணைக்குழு கண்டறிந்துள்ளது.

இவற்றுள் ஒரு நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்பொருளாக வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதேபோல், இக்கோயிலில் உள்ள 15 சாமி சிலைகளில் பல, மாற்றப்பட்டு அவற்றுக்கு பதிலாக போலி சிலைகள் வைக்கப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

30 கோடி மதிப்பிலான நடராஜர் சிலையை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டுவரவும், குலசேகரமுடையார் அறம்வளர்த்த நாயகி அம்மன் கோயிலில் நிறுவிடவும், புலன்விசாரணைக்குழு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. நடராஜர் சிலையுடன் சேர்த்து மொத்தம் 8 சிலைகள் கொண்டுவரப்பட வேண்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இக்கோயிலில் களவாடப்பட்ட 2 அடி உயர சிவகாமி அம்மன் சிலை 1985 இல் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், பாதுகாப்பு கருதி அருகிலுள்ள சுப்ரமணியசாமி கோயிலில் வைக்கப்பட்டதாக அற நிலையத்துறை ஆவணங்களில் சொல்லப்பட்டுள்ளதாகவும், ஆனால் அச்சிலையும் போலியானதுதான் என்பதும் பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழுவினரால் புலனாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்