"ஆன்-லைன் பத்திரப்பதிவில் ஆங்கிலத்தை சேர்க்க முடியாது" - தமிழக அரசு
ஆன்-லைன் பத்திர பதிவு விண்ணப்பத்தில் ஆங்கிலத்தை சேர்க்க முடியாது என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு ஆன்லைன் பத்திரப்பதிவு முறையில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழியில் பதிவு செய்யும் வசதி இருந்தது. இந்த ஆண்டு மென்பொருள் மேம்படுத்தப்பட்டு தமிழில் மட்டுமே பத்திரப்பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, ஆங்கில மொழியை இணைக்க கோரி வழக்கறிஞர் பிரகாஷ் ராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, "பத்திரப் பதிவு விண்ணப்பத்தில் ஆங்கிலத்தை சேர்க்க முடியாது" என தமிழக அரசு சார்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பத்திரப்பதிவு விண்ணப்பத்தை ஆங்கிலத்திலும் பதிவு செய்யும் வகையில் மென்பொருளை மாற்ற பரிசீலனை செய்ய முடியுமா? என்பது குறித்து அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை 30ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
Next Story