ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை : வாக்குமூலங்களில் முரண்...

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் அளித்த வாக்குமூலங்களுக்கு இடையே முரண்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை : வாக்குமூலங்களில் முரண்...
x
வாக்குமூலங்களில் முரண்...

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில், அப்பல்லோ மருத்துவமனையின் ஐசியூ பிரிவின் செவிலியர் பொறுப்பாளரான சாமுண்டீஸ்வரி, ஆண் செவிலியர் அனீஸ் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். சாமுண்டீஸ்வரி அளித்த வாக்குமூலத்தில், பணியில் இருந்த போது ஜெயலலிதாவை யாரும் பார்க்கவில்லை என்றும், சசிகலா மட்டும் வந்து பார்த்து செல்வார் என்று கூறியுள்ளார். 2016 டிசம்பர் 5 ஆம் தேதி தாம் பணியில் இருந்ததாகவும், அன்றைய தினம் 2008 ஆம் எண் அறையில் ஜெயலலிதா இருந்ததாகவும் சாமுண்டீஸ்வரி தெரிவித்தார். அப்போது ஆணைய வழக்கறிஞர்கள் பார்த்தசாரதி, நிரஞ்சன் ஆகியோர், செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி, அதி தீவிர சிகிச்சையில் ஈடுபட்ட மருத்துவர்கள் அந்த அறையில் இருந்தார்களா என கேள்வியெழுப்பினர். இதற்கு 2 பணி நேர மருத்துவர்கள் மற்றும் 2 செவிலியர்கள் பணியில் இருந்ததாக சாமுண்டீஸ்வரி பதில் அளித்தார். அப்படியானால் யாரையோ திருப்தி படுத்துவதற்கு பெயரளவில் அதி தீவிர சிகிச்சை என்று ஜெயலலிதாவை  வைத்திருந்தீர்களா என வழக்கறிஞர்கள் கேட்டதற்கு  சாமுண்டீஸ்வரி பதில் கூறாமல் மவுனம் காத்தார். 

ஆண் செவிலியர் அனீஸ் அளித்த வாக்குமூலத்தில், கடந்த 2016 செப்டம்பர் 22ம் தேதி ஆம்புலன்சில் போயஸ் இல்லத்திற்கு சென்றதாகவும், அப்போது ஜெயலலிதா கண்ணை மூடிய நிலையில் சோபாவில் அமர்ந்திருந்ததாகவும் கூறியுள்ளார். ஓட்டுனர் சுரேஷ்குமாருடன் சேர்ந்து ஜெயலலிதாவை ஸ்டெர்ச்சரில் கிடத்திய போது, சசிகலா மற்றும்  சிவக்குமார் இருந்ததாக அனீஸ் கூறினார். ஆம்புலன்சில் ஜெயலலிதாவை ஏற்றி அப்பல்லோ மருத்துவமனை செல்லும் வரை ஜெயலலிதா யாருடனும் பேசவில்லை என்றும், கண்ணை மூடிய நிலையில் தான் இருந்தார் என்றும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனிடையே ஆணையத்தின் முன்பு அளிக்கப்பட்ட பல்வேறு தரப்பினரின் வாக்குமூலங்களில் மீண்டும் முரண்கள் தென்பட தொடங்கியுள்ளன. ஆணையத்தில் ஏற்கனவே வாக்குமூலம் அளித்தவர்கள் டிசம்பர் 5ம் தேதி அன்று ஜெயலலிதா ஐசியூவில் இருந்ததாக வாக்குமூலம் அளித்துள்ள நிலையில், அன்றைய தினம் அவர் அறை எண் 2008 ல் தான் இருந்தார் என சாமுண்டீஸ்வரி கூறியுள்ளது முரணாக உள்ளது. 

ஆம்புலன்சில் பாதுகாப்பு அதிகாரி வீரப் பெருமாள் இருந்ததாக ஓட்டுனர் சுரேஷ்குமார் வாக்குமூலம் அளித்திருந்த நிலையில், அவர் ஆம்புலன்சில் வந்ததாக ஆண் செவலியர் அனீஸ் கூறாதது முரணாக உள்ளது. இதே போல்,  2016 செப்டம்பர் 22 ஆம் தேதி ஜெயலலிதாவை கார்டனில் இருந்து அழைத்து வரும் போது அங்கு  பணி பெண்கள், ஓட்டுனர் கண்ணன் இருந்ததாக  பலர் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில் , சசிகலா மற்றும்  மருத்துவர் சிவக்குமார் மட்டுமே இருந்ததாக அனீஸ் கூறியுள்ளார். ஆம்புலன்சில் செல்லும் போது ஜெயலலிதா பேசியதாக சசிகலா பிரமாணபத்திரம் தாக்கல் செய்துள்ள நிலையில், மருத்துவமனை கொண்டு செல்லும் வரை, கண் மூடிய நிலையில் இருந்தார், பேசவில்லை என அனீஸ் வாக்குமூலம் அளித்துள்ளார். கார்டனில் இருந்து படிகள் வழியாக ஜெயலலிதாவை இறக்கி வரும் போது மருத்துவர் சிவக்குமார் ‛ மருத்துவமனைக்கு செல்கிறோம்' என பேசியதாக ஓட்டுனர் சுரேஷ்குமார் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில், யாரும் பேசவில்லை எனஅனீஸ் கூறியுள்ளது முரண்களை ஏற்படுத்தியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்