நிலக்கரி இறக்குமதி செய்த செலவில், தமிழக மின் பகிர்மான கழகத்திற்கு ஆயிரத்து 559 கோடி ரூபாய் இழப்பு

நிலக்கரி இறக்குமதி செய்த செலவில், தமிழக மின் பகிர்மான கழகத்திற்கு ஆயிரத்து 559 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய தணிக்கைத் துறை அறிக்கை தெரிவிக்கிறது.
நிலக்கரி இறக்குமதி செய்த செலவில், தமிழக மின் பகிர்மான கழகத்திற்கு ஆயிரத்து 559 கோடி ரூபாய் இழப்பு
x
இறக்குமதி செய்வதில் சிறந்த நடைமுறைகள் கையாளப்படாததால்  சிறு ஏலதாரர்கள் போட்டியில் பங்கேற்க முடியவில்லை என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், இணையம் மூலம் நடக்கும் ஏல முறையிலும் சிறந்த நடைமுறைகளை டான்ஜெட்கோ பின்பற்றவில்லை என கூறப்பட்டுள்ளது.  

நிலக்கரி இறக்குமதி செய்யப்படும் தேதியன்று இருக்கும் விலையை நிர்ணயம் செய்யாமல், ஒப்பந்தப்புள்ளி திறக்கப்படும் தேதியன்று இருக்கும் விலையை நிர்ணயம் செய்ததால், 2013 அக்டோபர் முதல் 2016 பிப்ரவரி வரை, 746 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நிலக்கரியின் தரம் குறித்த தரச்சான்றிதழுக்கும், சுங்கத்துறையினரால் வழங்கப்பட்ட சோதனை முடிவுகளுக்கும் இடையே அதிக வேறுபாடு இருந்தது. இதனால் 813 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தணிக்கை துறை அறிக்கை தெரிவிக்கிறது.


நிலக்கரி இறக்குமதியில் 1500 கோடி ரூபாய் நஷ்டம் குறித்து சி.பி.ஐ. விசாரணை தேவை - ஸ்டாலின் கோரிக்கை.



தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து அரசுக்கு ஆயிரத்து 500 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியது குறித்து உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2016 - 17 ஆம் ஆண்டிற்கான சி.ஏ.ஜி அறிக்கையில் அதிமுக ஆட்சி நிர்வாகம் குறித்து வெளிவந்துள்ள தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் அக்டோபர் 2013 முதல் பிப்ரவரி 2016 வரை நிலக்கரி இறக்குமதி செய்ததில் மட்டும் ஆயிரத்து 599.81 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

நிலக்கரி இறக்குமதியில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் ஆதாரபூர்வமாக இன்றைக்கு தெரிய வந்திருப்பதாக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார். தற்போது வெளியாகி உள்ள சி.ஏ.ஜி அறிக்கை அதிமுக அரசின் இழப்புகளின் தொகுப்பாக உள்ளதாகவும், அமைச்சர்கள் அனைத்து துறைகளிலும் படு தோல்வியடைந்து விட்டார்கள் என்பதை பட்டவர்த்தனமாக வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மேலும், தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து ஆயிரத்து 500 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியதில் உள்ள முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ஸ்டாலின் விடுத்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார். இல்லையென்றால் திமுக சார்பில் வழக்கு தொடரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்