உலக கோப்பை 2019 : நம்பமுடியாத சுவாரஸ்ய தகவல்கள் - நட்சத்திர நாயகர்கள்

இந்த உலக கோப்பை போட்டியின் நட்சத்திர நாயகர்கள்... கவனிக்க வேண்டிய தகவல்கள்
x

உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் ஆட்ட நாயகன் விருது பென் ஸ்டோக்ஸிற்கு வழங்கப்பட்டது. கடந்த 2016 ஆம் ஆண்டு 20 ஓவர்கள் உலக கோப்பை போட்டியில், மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு, இறுதி ஓவரில் 19 ரன்கள் தேவை என்ற நிலையில், முதல் மூன்று பந்தில் 3 சிக்சர்கள் கொடுத்து வெற்றியை எதிர் அணிக்கு தாரை வார்த்திருந்தார் பென் ஸ்டோக்ஸ். இன்று அதே ஸ்டோக்ஸ், நெருக்கடியான நிலையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இங்கிலாந்து அணி உலக கோப்பையை வெல்ல காரணமாகி இருக்கிறார். 

இந்த உலக கோப்பை போட்டியின் தொடர் நாயகன் விருது நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன்க்கு வழங்கப்பட்டது. இந்த தொடரில் அவர் 578 ரன்கள் குவித்துள்ளார். அவருக்கு விருது வழங்கியவர் நம் ச‌ச்சின் டெண்டுல்கர். இதில் சச்சினுக்கும், வில்லியம்சனுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது தெரியுமா...? கோப்பையை தவறவிட்ட வருத்தத்தில் கேன் வில்லியம்சன் எப்படி தொடர் நாயகன் விருது வாங்கினாரோ? அதே போல் 2003 உலக கோப்பை இறுதி போட்டியில் உலக கோப்பை கனவு தகர்ந்த உடன் மகிழ்ச்சியே இல்லாமல் தொடர் நாயகன் விருதை பெற்றவர், நம் சச்சின் டெண்டுல்கர். இது தான் அந்த ஒற்றுமை... 

இங்கிலாந்துக்கு உலக கோப்பையை வாங்கி கொடுத்த கேப்டன் மோர்கன் முதல், வெற்றிக்கு வித்திட்ட ஸ்டோக்ஸ் வரை பலரின் பூர்வீகம் வேறு நாடு என்றால் நம்புவீர்களா..? அது தான் உண்மை. கேப்டன் இயான் மோர்கன், அயர்லாந்தை பூர்வீகமாக கொண்டவர், 2007 ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் அயர்லாந்து அணிக்காக விளையாடியவர், மோர்கன் இங்கிலாந்து அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் மேற்கு இந்திய தீவுகளில் பிறந்தவர். தொடக்க ஆட்டக்கார‌ர் ஜேசன் ராய், தென் ஆப்பிரிக்காவில் பிறந்தவர். சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷீத்தின் பூர்வீகம் பாகிஸ்தான். ஆட்ட நாயகன் விருதை பெற்ற பென் ஸ்டோக்ஸ், நியூசிலாந்தில் பிறந்தவர்... இன்று நியூசிலாந்து அணியின் உலக கோப்பை கனவை தகர்த்தவர், அவங்க ஊர்க்காரர் தான்.

நடந்து முடிந்துள்ள உலக கோப்பை தொடரில்  சில சாதனைகளும் படைக்கப்பட்டுள்ளன. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்கார‌ர் ரோகித் சர்மா 5 சத‌ங்கள் விளாசி சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 2015 உலக கோப்பை போட்டியில் இலங்கை அணியின் சங்க‌காரா 4 ச‌தங்கள் அடித்த‌தே சாதனையாக இருந்த‌து. ஆஸ்திரேலிய அணியின் மிட்சல் ஸ்டார்க் 27 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இதற்கு முன் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீர‌ர் கிளன் மெக்ராத் 26 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்த‌து. இதே போல, இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன்  ஒரே போட்டியில் 17 சிக்சர்கள் பறக்கவிட்டு சாதனை படைத்துள்ளார். இதற்கு முன், கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணியின் கிறிஸ்கெய்ல் 16 சிக்சர்கள் அடித்த‌தே சாதனையாக இருந்த‌து. 

கடந்த 1987ல் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்ற இங்கிலாந்து அணி, தொடர்ந்து நடந்த 1992 உலக கோப்பையிலும் இறுதி போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்றது. 2007 ல் ஆஸ்திரேலியாவிடம் தோற்ற இலங்கை அணி, அடுத்து நடந்த 2011 உலக கோப்பையில் இந்தியாவிடம் இறுதி போட்டியில் தோற்றது. இதே போல 2015 உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்ற நியூசிலாந்து அணி, இந்த முறை இங்கிலாந்து அணியிடம் தோற்றுள்ளது. ஆக, தொடர்ந்து 2 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறி சில அணிகள் கோப்பையை தவறவிடுவது தொடர்கதையாகியிருக்கிறது. 
கடந்த  3 உலக கோப்பை தொடர்களில் சில சுவாரஸ்ய ஒற்றுமைகள் உள்ளன. 3 போட்டிகளிலும், இலக்கை துரத்திய அணியே வெற்றி பெற்றுள்ளது. 

2011ல் இந்திய அணி, இலங்கை நிர்ணயித்த 275 என்ற இலக்கை துரத்தி வெற்றி பெற்றது. 2015ல் நியூசிலாந்து அணி நிர்ணயித்த 184 ரன்கள் என்ற இலக்கை ஆஸ்திரேலிய அணி எளிதாக வென்றது. இந்த முறையும், நியூசிலாந்து அணி 241 ரன்கள் என இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில், ஆட்டம் சமனாகி சூப்பர் ஓவருக்கு சென்று ஒருவழியாக இங்கிலாந்தே வெற்றி பெற்றிருக்கிறது. இதே போல, கடந்த 3 உலக கோப்பை தொடரிலும், முதலில் சதம் அடிக்கும் வீர‌ரின் அணி வெற்றி பெற்றுள்ளது. 2011 ல் வங்கதேசத்திற்கு எதிரான முதல் லீக் ஆடத்திலே  இந்திய அணியின் முன்னாள் வீர‌ர் சேவாக், 175 ரன்கள் குவித்தார். 2015 ல், 2 வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் ஆரோன் பின்ச் 135 ரன்கள் எடுத்திருந்தார். இந்த முறை, 5 வது லீக் ஆட்டம் வரை யாரும் சதம் அடிக்கவில்லை, 6 வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின், ஜோ ரூட், 107 ரன்கள் எடுத்திருந்தார். 

மற்றொரு சுவாரஸ்ய தகவல், இறுதி போட்டியில் டாஸ் வென்ற அணிகள் அனைத்தும் தோல்வியை சந்தித்துள்ளன. 2011 ல் இலங்கை அணி டாஸ் வென்றது, இந்தியா கோப்பையை வென்றது. 2015ல் நியூசிலாந்து டாஸ் வென்றது, ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது, இந்த முறையும் நியூசிலாந்து அணி டாஸ் வென்றது, இங்கிலாந்து கோப்பையை வென்றுள்ளது. 2011 ல் உலக கோப்பை தொடரை இந்தியாவும் இலங்கையும் சேர்ந்து நடத்தியது. இவ்விரு அணிகளுமே  இறுதி போட்டியில் மோதின. இறுதி போட்டி இந்தியாவில் நடந்த‌து. இந்திய அணி கோப்பையை வென்றது... 2015 ல் ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் இணைந்து தொடரை நடத்தின. இறுதி போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்த‌து. ஆஸ்திரேலியாவே கோப்பையை வென்றது. அதே போல இந்த முறையும், போட்டியை நடத்திய இங்கிலாந்து, அணியே கோப்பையை வென்றுள்ளது. அடுத்த முறை 2023ல் நடைபெற உள்ள  உலக கோப்பை தொடரை இந்தியா நடத்த உள்ளது. அப்போ, அந்த கோப்பை நமக்கு தானா...?

Next Story

மேலும் செய்திகள்