ஜெ. நினைவு தினம் - சசிகலா கண்ணீர் முதல் EPS கார் முற்றுகை வரை... மெரினாவில் பரபரப்பு நிமிடங்கள்

ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினமான இன்று, ஓ.பி.எஸ். ஈபி.எஸ்., சசிகலா, தினகரன் உள்ளிட்ட தலைவர்களும் ஏராளமான தொண்டர்களும் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
x
ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினமான இன்று, ஓ.பி.எஸ். ஈபி.எஸ்., சசிகலா, தினகரன் உள்ளிட்ட தலைவர்களும் ஏராளமான தொண்டர்களும் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.  

தென் இந்திய திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ஜெயலலிதா, அதன் பிறகு தீவிர அரசியலில் ஈடுபட்டு, அதிமுகவை வழிநடத்திய சக்தி வாய்ந்த பெண் ஆளுமையாக திகழ்ந்தார். 

ஆறு முறை தமிழக முதலமைச்சராக பதவி வகித்த ஜெயலலிதா, முதலமைச்சராக இருக்கும் போது உடல்நலக்குறைவு காரணமாக தனது 68 வது வயதில் உயிரிழந்தார். 

 5 ஆண்டுகளை கடந்தும், ஜெயலலிதா மரணம் குறித்த மர்மம் இன்னும் நீடிக்கும் நிலையில், இதற்காக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு அப்போலோ மருத்துவமனை தடை விதிக்க கோரிய வழக்கின் தீர்ப்பு தற்போது தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, ஓபிஎஸ், ஈபிஎஸ் என்ற இரட்டை தலைமையின் கீழ் இயங்கி வரும் அதிமுகவில்  குழப்பம் தொடர்கிறது. 

டிடிவி தினகரனின் அமமுக.. சிறையில் இருந்து சசிகலா வரவு.. சசிகலாவை கட்சியில் சேர்க்க ஒருபுறம் ஆதரவு மறுபுறம் எதிர்ப்பு... அன்வராஜா நீக்கம்... சமீபத்தில் அதிமுக தேர்தல்... மனு தாக்கல் செய்ய வந்தவர் விரட்டியடிப்பு... 

இப்படி அடுத்தடுத்து அசாதாரண சூழல்களுக்கு மத்தியில், இன்று ஜெயலலிதாவின் நினைவு தினம் அதிமுகவினரால் அனுசரிக்கப்பட்டது. மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் ஒபிஎஸ் , இபிஎஸ் உள்ளிட்ட அதிமுக முன்னணி நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

பிரித்தாளும் சூழ்ச்சிகள் செய்து எதிரிகள் வெற்றி பெற விடாது, அதிமுகவை இரும்புக் கோட்டையாக காத்திடுவோம் என ஒபிஎஸ் , இபிஎஸ் தரப்பு உறுதிமொழி ஏற்றது. 

அதன் பிறகு, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ஆதரவாளர்களுடன் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

அவரை தொடர்ந்து ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய சசிகலா, வரும் தேர்தல்கள் அனைத்திலும் வெற்றி பெற ஒன்றிணைந்து செயல்படுவோம், கரம் கோர்ப்போம் என உறுதிமொழி ஏற்று கொண்டார். 

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் இல்லத்திற்கு உரிமை கோரி வழக்கு தொடர்ந்து அதில் வெற்றி பெற்றுள்ள தீபக், அந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை நினைவிடத்தில் வைத்து மரியாதை செலுத்தினார்.

பரபரப்புக்கு இடையே நினைவிடத்தில் பலரும் அஞ்சலி செலுத்திய சூழலில், ஷாலு என்ற அதிமுக தொண்டர் வித்தியாசமாக ஜெயலலிதா போன்று சேலை அணிந்தும், கண்ணாடி போட்டுக் கொண்டு வந்தது அதிமுகவினரை திரும்பிப் பார்க்க வைத்தது... 


 

Next Story

மேலும் செய்திகள்