மருத்துவமனையில் அதிமுக அவை தலைவர் - அடுத்தடுத்து நலம் விசாரித்த ஈபிஎஸ், சசிகலா

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனை, எடப்பாடி பழனிசாமியும், சசிகலாவும் அடுத்தடுத்து சந்தித்து நலம் விசாரித்தனர். அடுத்தடுத்த சந்திப்புகளால் மருத்துவமனை வளாகம் பரபரப்பாக காட்சியளித்தது.
x
வயது மூப்பு, உடல்நலக்குறைவு போன்ற காரணங்களால் தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஓய்வில் இருந்து வருகிறார் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன். திங்கட்கிழமை அவருக்கு உடல்நிலை மோசமானதால், ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.இந்த தகவலை அறிந்தவுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மதுசூதனனை நேரில் சென்று உடல்நலம் விசாரித்தார்.தொடர்ந்து செவ்வாய்க்கிழமை பகல் 12.30 மணிக்கு ஆயிரம் விளக்கு வந்த எடப்பாடி பழனிசாமி, மதுசூதனன் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இந்த சமயத்தில் திடீரென ஜெயலலிதா பயன்படுத்திய காரில் அதிமுக கொடியுடன் சசிகலாவும் மருத்துவமனைக்கு வருகை தந்ததால் அந்த இடமே பரபரப்பானது.அடுத்த சில நிமிடங்களில் எடப்பாடி பழனிசாமி காரில் புறப்பட்டு சென்றதை அடுத்து சசிகலா மருத்துவமனைக்குள் சென்று மதுசூதனனிடம் உடல்நலம் விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா, 14 வயதிலேயே எம்ஜிஆர் மன்றம் ஆரம்பித்து அதிமுகவுடன் பயணித்து வருபவர் மதுசூதனன் எனவும், எங்களது கட்சியிலும், குடும்பத்திலும் மூத்த சகோதரர் என தெரிவித்தார். அவரது உடல்நலம் பாதிக்கப்பட்ட செய்தி அறிந்து நலம் விசாரிக்க வந்ததாக சசிகலா தெரிவித்தார்.இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மதுசூதனன் உடல்நிலை குறித்து சசிகலா நேரில் கேட்டறிந்தது ஆரோக்கியமான விஷயம் எனவும், இருப்பினும் கட்சியில் இல்லாமல் காரில் அதிமுக கொடி பயன்படுத்துவது சட்டப்படி தவறு என தெரிவித்தார்.சொத்து வழக்கில் விடுதலை ஆனதில் இருந்து அரசியல் நிகழ்வுகளில் ஏதும் பங்கேற்காமல் இருந்து வந்தார், சசிகலா. இந்த சூழலில், அதிமுக அவைத் தலைவரை, மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்துள்ளது, அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்