முன்களப் பணியாளர்களுக்கான வன்முறை : ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது - பிரதமர்

கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் முன்களப் பணியாளர்கள் மீதான வன்முறை, மற்றும் முரட்டுத்தனமான நடத்தையை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது என பிரதமர் நரேந்திரமோடி எச்சரித்துள்ளார்.
x
கர்நாடக மாநிலத்தில் உள்ள ராஜீவ்காந்தி மருத்துவ பல்கலைக்கழக நிகழ்வில், காணொலி காட்சி மூலம் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கண்ணுக்கு தெரியாத எதிரியான கொரோனா உடன், வெள்ளை உடை தரித்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள்  ராணுவத்தைப் போல போரிட்டு வருவதாக தெரிவித்தார். இந்த போரில் நமது மருத்துவத் துறையினர் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என தெரிவித்த பிரதமர், முன்கள பணியாளர்கள் மீதான, வன்முறை, துஷ்பிரயோகம் மற்றும் முரட்டுத்தனமான நடத்தையை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கடந்த 5 ஆண்டுக்காலத்தில் நாட்டில், புதிதாக 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக பிரதமர் மோடி சுட்டிக்காட்டி உள்ளார். இதுதவிர 30 ஆயிரம் இளநிலை மருத்துவ கல்வி இடங்கள் மற்றும் 15 ஆயிரம் முதுநிலை மருத்துவ இடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.  

Next Story

மேலும் செய்திகள்