அரவிந்த் கெஜ்ரிவால் கடந்து வந்த பாதை.

டெல்லி முதலமைச்சராக தொடர்ந்து மூன்றாவது முறையாக அரவிந்த் கேஜ்ரிவால் பதவியேற்றுள்ள நிலையில், அவர் கடந்து வந்த பாதை ஒரு செய்தி தொகுப்பு..
x
ஹரியானாவில் 1968-ஆம் ஆண்டு   நடுத்தர பொறியாளரின் குடும்பத்தில் பிறந்த அரவிந்த் கெஜ்ரிவால், ஐஐடி காரக்பூரில் இயந்திரவியல் பொறியியல் பட்டம் படித்தார். டாடா ஸ்டீல்ஸ் நிறுவனத்தில் 1989-ஆம் ஆண்டு பணியுல் சேர்ந்த கெஜ்ரிவால் 1992-ஆம் ஆண்டு மத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கு தயாரானார். இதனால் தனியார் நிறுவன பணியில் இருந்து விலகிய கெஜ்ரிவால், கொல்கத்தாவில் சில ஆண்டுகள் வாழ்ந்தபோது அன்னை தெரசா நடத்தி வந்த மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டீஸ் சேவையில்  தன்னை தொடர்புபடுத்திக் கொண்டார்.


* 1995-ஆம் ஆண்டு மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்ற கெஜ்ரிவாலுக்கு இந்திய வருவாய் பணியில் சேர வாய்ப்பு கிடைத்தது. வருமான வரித்துறையில் இருந்தபோது கெஜ்ரிவாலும், மணிஷ் சிசோடியாவும் சேர்ந்து 1999-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பரிவர்தன் என்ற அமைப்பை நிறுவினார்கள். பிறகு இருவரும் கபீர் என்ற மற்றொரு தத்துவார்த்த சிந்தனை அமைப்பை நிறுவினார்கள். அதன் மூலம் ஊழலுக்கு எதிரான பிரசாரத்தை அவர்கள் மேற்கொண்டனர். 


* 2006ஆம் ஆண்டு வருமான வரித்துறையின் புது டெல்லி பிரிவு இணை ஆணையராக இருந்தபோது, தமது பதவியில் இருந்து கெஜ்ரிவால் விலகினார்.
இந்த நிலையில், அண்ணா ஹசாரேவுடன் கெஜ்ரிவாலுக்கு தொடர்பு ஏற்பட்டது. அன்னா ஹசாரே, கிரண் பேடி உள்ளிட்டோர் முன்னெடுத்த ஊழலுக்கு எதிரான நடவடிக்கை என்ற அமைப்புடன் சேர்ந்து, ஜன லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி நடந்த போராட்டத்தில் கெஜ்ரிவால் பங்கேற்றார்.

* அன்னா ஹசாரேவின் மூளையாக அப்போது அறியப்பட்ட கெஜ்ரிவால், பிறகு ஹசாரேவிடம் இருந்து விலகி 2012-ஆம் ஆண்டில் ஆம் ஆத்மி என்ற கட்சியை தொடங்கி முழு நேர அரசியலுக்குள் நுழைந்தார். 2013ஆம் ஆண்டு டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியுடன் முதல்முறையாக முதலமைச்சர் பொறுப்பை வகித்த கெஜ்ரிவால், 49 நாட்களுக்கு பிறகு பதவியை துறந்தார். 


* எளிமையான தோற்றம், சாமானியர்களை அணுகும் போக்கு, அடித்தட்டு மக்களை கவரும் விதத்தில் கல்வி, குடிநீர், மின்சாரம், சுகாதாரம் ஆகிய நான்கு துறைகளில்  மேற்கொள்ளப்பட்ட திட்டங்களின் சாதனை ஆகியவை கெஜ்ரிவாலின் பலமாக பார்க்கப்படுகிறது 2015 ஆண்டு நடந்த தேர்தலில் 67 தொகுதியில் வெற்றி, 2020 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 62 தொகுதியில் வெற்றி என ஹாட்ரிக் வெற்றி பெற்ற  அரவிந்த் கெஜ்ரிவால், தற்போது தவிர்க்க முடியாத தலைவராக உருவெடுத்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்