"மோடி அரசை விமர்சிக்கும் தைரியம் தொழிலதிபர்களுக்கு இல்லை" - ராகுல் பஜாஜ்

மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசை விமர்சிக்க பயமாக இருக்கிறது என அமித்ஷா முன்னிலையில் பஜாஜ் குழுமத் தலைவர் ராகுல் பஜாஜ் தெரிவித்துள்ளார்.
மோடி அரசை விமர்சிக்கும் தைரியம் தொழிலதிபர்களுக்கு இல்லை - ராகுல் பஜாஜ்
x
மும்பையில் நேற்று மாலை ஆங்கில நாளிதழ் நடத்திய விழாவில் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் கலந்துகொண்டனர். அவர்களுடன் முகேஷ் அம்பானி, குமார் மங்கலம் பிர்லா, சுனில் பாரதி மிட்டல் உள்ளிட்ட தொழிலதிபர்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய பஜாஜ் குழுமத் தலைவர் ராகுல் பஜாஜ்  மோடி அரசை விமர்சிக்கும் தைரியம் தனது நண்பர்களான தொழிலதிபர்களுக்கு இல்லை என்றார்.  காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது யாரையும் விமர்சிக்க வாய்ப்பு இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.   நம் நாட்டில் தற்போது சகிப்பின்மை சூழல் நிலவுவதாகவும் ஆனால் அதற்கு காரணமான யாரும் தண்டிக்கப்படவில்லை என்றும்  ராகுல் பஜாஜ் தெரிவித்தார். 

இதற்கு பதிலளித்த அமித் ஷா, இந்த நாட்டில் யாரும் பயப்பட வேண்டிய அவசியமில்லை என்றார். ராகுல் பஜாஜ் குறிப்பிட்டது போல் கருத்தை வெளிப்படுத்த தயக்கம் நிலவி வந்தால் அதை போக்குவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.  பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. அரசுக்கு எதிராக எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாக அமித்ஷா கூறினார். பசு பாதுகாப்பு கும்பல் கொலை பற்றிய ராகுல் பஜாஜ் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அமித்ஷா கும்பல் கொலை சம்பவத்தில் பல வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளதாக விளக்கம் அளித்தார். 


Next Story

மேலும் செய்திகள்