மகாராஷ்டிராவில் ஆட்சி : சிவசேனாவுக்கு ஆளுநர் அழைப்பு

மஹாராஷ்டிராவில் ஆட்சியமைக்க வருமாறு சிவசேனா கட்சிக்கு ஆளுநர் பகத்சிங் கோஸ்யாரி அழைப்பு விடுத்துள்ளார்.
மகாராஷ்டிராவில் ஆட்சி : சிவசேனாவுக்கு ஆளுநர் அழைப்பு
x
சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற மகாராஷ்டிராவில், பாஜக, சிவசேனா கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், முதல்வர் பதவியை சிவசேனா கட்சி கேட்டதால் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்தது. மூன்று வாரங்கள் நீடித்த இந்த இழுபறிக்கு இடையே, நேற்றுடன் முந்தைய சட்டப்பேரவை பதவிக்காலம் முடிந்ததால், 105 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற பாஜகவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். இந்நிலையில், ஆளுநர் பகத் சிங்கை தற்போதைய காபந்து முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் மற்றும் மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டில் இருவரும் சந்தித்தனர். அப்போது, ஆளுநர் அழைப்பை பாஜக ஏற்க மறுப்பதை இருவரும் தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக, 56 இடங்களில் வெற்றி பெற்று 2வது பெரிய கட்சியாக உள்ள சிவசேனாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். முன்னதாக, உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா கட்சி எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெற்றது. அதில், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியுடன் சிவசேனா தொடர்பில் இருப்பதாக பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டில் குற்றஞ்சாட்டி உள்ளார். ஆளுநரின் அழைப்பை ஏற்று சிவசேனா ஆட்சியமைக்கும் பட்சத்தில் பாஜக கூட்டணி மகாராஷ்டிராவில் உடைகிறது. மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள சிவசேனா அமைச்சர்கள் பதவி விலகுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்