"முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது" - விசாரணைக்கு பின்னர் கைது செய்தது அமலாக்கத்துறை

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக திகார் சிறையில் இன்று 2 மணி நேரம் விசாரணை நடத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள், ப.சிதம்பரத்தை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது - விசாரணைக்கு பின்னர் கைது செய்தது அமலாக்கத்துறை
x
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி கைது செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து தற்போது சிதம்பரம் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவருடைய நீதிமன்ற காவல் நாளையுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி அஜய்குமார் குகர் நேற்று,  சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்கு அனுமதி வழங்கியதோடு, தேவைப்பட்டால் அவரை கைது செய்யலாம் என அமலாக்கத் துறைக்கு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்திருந்தார். இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் 3 பேர் இன்று காலை திகார் சிறைக்கு நேரடியாகச்சென்று சிதம்பரத்திடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். இதையடுத்து அமலாக்கத் துறை அதிகாரிகள் திகார் சிறையில் இருந்து புறப்பட்டு சென்றனர். இந்நிலையில், ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் சி.பி.ஐ.  கைதுக்கு எதிராக சிதம்பரம் தாக்கல் செய்த மனு பிற்பகல் 2 மணிக்கு உச்சநீதிமன்றத்தில், நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்