ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: "ஆக. 30 வரை ப. சிதம்பரத்திற்கு சிபிஐ காவல் நீட்டிப்பு" - டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம்

ஐ.என். எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்தின் சிபிஐ காவல் வருகிற 30 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. ப. சிதம்பரத்திற்கு பிரான்ஸ் - இங்கிலாந்து உள்பட 11 நாடுகளில் சொத்து இருப்பதாக அமலாக்கத்துறை புதிய குற்றச்சாட்டை வெளியிட்டு உள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ஆக. 30 வரை ப. சிதம்பரத்திற்கு சிபிஐ காவல் நீட்டிப்பு - டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம்
x
ஐ.என். எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு, முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரத்திற்கு  மேலும் கடும் நெருக்கடியை உருவாக்கி உள்ளது. 5 நாள் சிபிஐ காவல் முடிந்து, ரோஸ் அவின்யூவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ப. சிதம்பரம் ஆஜர் படுத்தப்பட்டார்.

முன்னதாக ஐஎன் எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப. சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது. இந்த விசாரணையின் போது, ப. சிதம்பரம் மற்றும் அவரது பினாமிகள் பெயரில் அர்ஜென்டினா, ஆஸ்திரியா, பிரிட்டிஷ், விர்ஜின் தீவுகள், பிரான்ஸ், கிரீஸ், மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா, ஸ்பெயின் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் வங்கி கணக்குகளும் சொத்துக்களும் உள்ளதாக நிதித்துறை புலனாய்வு அமைப்பிடம் இருந்து தகவல் கிடைத்துள்ளதாக அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் சிதம்பரத்தின் பினாமிகள் பெயரில்17 வங்கி கணக்குகளும் 10 விலை உயர்ந்த சொத்துக்களும் உள்ளதாகவும் அமலாக்கத்துறை கூறியது. இதற்கு பதில் அளித்த ப. சிதம்பரம் வழக்கறிஞர் கபில்சிபல், வெளிநாடுகளில் சொத்து இருப்பதை நிரூபிக்க தயாரா? என சவால் விடுத்தார். அவ்வாறு நிரூபித்தால் முன்ஜாமீன் மனுவை திரும்ப பெற்றுக்கொள்ள தயார் என்று கபில் சிபல் அறிவித்தார்.

மாலையில், சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை துவங்கியது. கடந்த 5 நாட்களும் ப. சிதம்பரம் ஒத்துழைப்பு தரவில்லை என குற்றஞ் சாட்டிய சிபிஐ, மேலும் 5 நாள் காவலை நீட்டிக்க கோரிக்கை விடுத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ப. சிதம்பரம் வழக்கறிஞர் கபில்சிபல், கைது என்பது அவமானம் - அவமரியாதை தொடர்பு உடையது என்று சுட்டிக்காட்டினார். ஒரு நபர் கைது செய்யப்படும் போது அந்த நபரை அழித்து விடவும் - குற்றவாளி என  நம்ப வைப்பதற்காகவும், இந்த வழக்கு நடந்து வருவதாக கபில்சிபல் வாதிட்டார். 

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி முடிவில் ப. சிதம்பரத்தின் சிபிஐ காவலை வருகிற 30 ம் தேதி வரை, நீட்டித்து, உத்தரவு பிறப்பித்தார். எனவே சிபிஐ- யின் புதிய விசாரணைக்குப்பின் வருகிற 30 ம் தேதி வெள்ளிக்கிழமை மீண்டும் ஆஜர்படுத்தப்படுவார்.


Next Story

மேலும் செய்திகள்