கர்நாடக சட்டபேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா வெற்றி

கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், எடியூரப்பா தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ளது.
x
கர்நாடக சட்டப்பேரவையில் தமது அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது பேசிய அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா, சித்தராமையா மற்றும் குமாரசாமி முதலமைச்சர்களாக இருந்த போது பழிவாங்கும் அரசியல் செய்யவில்லை என்றும், நிர்வாகம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். அதேநேரத்தில், தானும் பழிவாங்கும் அரசியலில் ஈடுபட போவதில்லை எனவும் கூறிய எடியூரப்பா, மறப்போம் மன்னிப்போம் என்பதில் தமக்கு நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார். மேலும், தம்மை எதிர்ப்பவர்களையும் அன்பு செய்வதாகவும், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் ஜே.பி.நட்டா  ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் எடியூரப்பா கூறினார். விவசாயிகளின் பிரச்சனையை தீர்க்க விரும்புவதாக தெரிவித்த எடியூரப்பா, பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீ​ழ் 2 தவணையாக தலா இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றார். அனைவரும் இணைந்து செயல்படலாம் என அழைப்பு விடுத்த எடியூரப்பா, தமது அரசு மீது அனைவரும் நம்பிக்கை தெரிவித்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். இதனை தொடர்ந்து பேசிய காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் சித்தராமையா மற்றும்  குமாரசாமி ஆகியோர் பேசினர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற குரல் வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு  வெற்றி பெற்றதாக சபாநாயகர் கே.ஆர். ரமேஷ் குமார் தெரிவித்தார். பெரும்பான்மைக்கு 104 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், தீர்மானத்திற்கு ஆதரவாக 105 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

14 மாதங்களாக ஆற்றிய பணிகள் குறித்து மக்கள் அறிவார்கள் - முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி பதில்

முன்னதாக, எடியூரப்பா அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாத​த்தில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் கட்சி சட்டமன்ற கட்சித் தலைவர் சித்தராமையா, எந்த சூழ்நிலையில், எடியூரப்பா முதலமைச்சர் ஆனார் என பேச விளைவதாக தெரிவித்தார். . மக்களுக்கு பணியாற்றவே தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும், அதனை செய்ய முயற்சி செய்வோம் என்றும் சித்தராமையா குறிப்பிட்டார். இதனை செய்ய நான் முதலமைச்சராக முயன்றுள்ளேன், அதனை தான் குமாரசாமியும் செய்தார் என்று சித்தராமையா தெரிவித்தார். நிர்வாகம் ஸ்தம்பித்துவிட்டதாகவும், அதனை சீர் செய்ய விரும்புவதாகவும் எடியூரப்பா சொன்னது போல தற்போது நிலை இல்லை என்றும் சித்தராமையா தெரிவித்தார். தொடர்ந்த பேசிய முன்னாள் முதலமைச்சர் குமாராசாமி, 14 மாதங்களாக ஆட்சி நடத்தி உள்ளேன், உங்களுடைய கேள்விக்கு பதில் அளிக்க எனக்கு நிர்பந்தமில்லை என்றும், என்னுடைய மனசாட்சிக்கு பதிலளிக்க விரும்புகிறேன் என்றும் தெரிவித்தார். கடந்த 14 மாதங்களாக நான் செய்த எல்லாம் பதிவாகியுள்ளது என்றும், நான் என்ன செய்தேன் என்பதை மக்கள் அறிவார்கள் என்றும் குமாரசாமி குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்